Connect with us

கொல்லாமல் வெல்லும் குட்டி ஊமை அரசன்! – Ranking of Kings!

Anime

கொல்லாமல் வெல்லும் குட்டி ஊமை அரசன்! – Ranking of Kings!

cinepettai.com cinepettai.com

போஸே ராஜ்ஜியத்தின் குட்டி இளவரசன் போஜ்ஜி. போஜ்ஜியின் தந்தை போஸேதான் இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். ஜெயன்ட்ஸ் எனப்படும் மிக உயரமான அஜானுபாகுவான இனத்தை சேர்ந்தவர் போஸே. ஆனால் அவரது மகன் போஜ்ஜி பலவீனமானவனாகவும், காது கேட்காத, வாய் பேச இயலாதவனாகவும் இருக்கிறான். போஜ்ஜியின் தாய் இறந்து விட, போஸே இரண்டாம் தாரமாக ஹில்லிங் என்ற மந்திரம் பயின்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு டைடா என்றொரு மகன் பிறக்கிறான். அவன் போஜ்ஜியை விட வீரதீரமாகவும், உடல் வலிமையோடும் இருக்கிறான்.


டைடா தான் அடுத்த அரசன் ஆவான் என பலரும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இதுபற்றிய எந்த கவலையும் இல்லாத போஜ்ஜி இயற்கையையும், உயிர்களையும் ரசித்த வண்ணம் வாழ்க்கையை கழிக்கிறான். அவ்வாறாக ஒருமுறை அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் விளையாட போகும் போஜியை அழிக்கப்பட்ட கொலைக்கார கூட்டத்தில் மிச்சமிருக்கும் காகே என்ற நிழல் போன்ற ஜந்து சந்திக்கிறது. அதன் மொத்த இனமும் அழிந்த நிலையில் அது திருடி வாழ்ந்து வருகிறது. அது போஜ்ஜியை மிரட்டி அவனது உடை, ஆபரணங்களை கேட்க, போஜ்ஜியும் கொடுத்து விடுகிறான். அவன் ஆடையில்லாமல் தெருவில் நடந்து செல்வதை கண்டு அந்த நாட்டு மக்கள் கிண்டல் செய்து சிரிக்கிறார்கள்.


ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படாத போஜ்ஜி அடுத்த நாள் அதை விட உயரிய ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்து கொண்டு மீண்டும் காகே இருக்குமிடம் செல்கிறான். அவற்றை அது கேட்காமலே கழற்றி தந்துவிட்டு மீண்டும் ஆடையில்லாமல் கோட்டை நோக்கி செல்கிறான். அவனது அன்பால், பரிவால் ஈர்க்கப்பட்ட காகே அவனோடே செல்கிறது. அப்போதுதான் அவன் அரண்மனையில் நடத்தப்படும் மோசமான விதம் கண்டு காகே வருந்தி அவனோடே நண்பனாக இருக்க முடிவு செய்கிறது.


நோய்வாய்ப்பட்டிருந்த மன்னர் போஸே இறந்து விடுகிறார். அவர் இறக்கும் முன்பாக தனக்கு பின்னர் தனது மூத்த மகன் போஜ்ஜிதான் அரசனாக வேண்டும் என சொல்லிவிட்டு இறக்கிறார். ஆனால் காது கேட்காத ஊமை இளவரசனை அரசன் ஆக்குவதில் போஜ்ஜியின் சித்தி ஹில்லிங்கிற்கும், மற்ற அமைச்சர்களுக்கும் விருப்பம் இல்லாததால் இளையவன் டைடாவை அரசனாக்குகிறார்கள். டைடா அவனது அறையில் இருக்கும் மாயக்கண்ணாடி ஒன்றில் தோன்றும் உருவம் ஒன்றின் கட்டளைகளுக்கு ஆட்பட்டு செயல்படுபவன். டைடா அரசனான உடன் போஜ்ஜி நாடு கடத்தப்படுவதுடன் அவனை கொல்லவும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர்.


இந்த அரசியல் சதிகளிலிருந்து போஜ்ஜி தப்பித்து எப்படி அரியணையை அடைகிறான்? அதற்கு போஜ்ஜியின் உற்ற நண்பனாக மாறிய காகே எப்படி உதவுகிறது? என்பதை 23 எபிசோடுகளாக தயாரித்துள்ளனர். குழந்தைகளுக்கான மாயாஜால கதைகள் போன்ற அமைப்புதான். ஆனால் அதில் பேசியிருக்கும் கருத்துகள் பெரியவர்களும் உணர்ந்து கொண்டு பூரிக்கக்கூடியவை. உடல் பலமும், வீரமும்தான் அரசனுக்கு அழகு என்பது ஆண்டாண்டு காலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டு வரும் ஒன்று. அதனால்தான் அரசர்கள் படத்தில் கூட கட்டுமஸ்தான ஹீரோக்கள் வருகிறார்கள். ஆனால் ரொம்ப குண்டாகவோ, ஒல்லியாகவோ ஒரு அரசன் ஏன் இருந்திருக்கக் கூடாது? அப்படி ஏன் யோசிப்பதில்லை என்றால் காலம்காலமாக உடல்வலிமை, வீரம் என்பது கட்டுமஸ்தான உடல்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இருக்கும் என பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.


இந்த பழமையான புகுத்தப்பட்ட வழக்கங்களை இந்த அனிமெ தொடர் வெற்றிகரமாக உடைத்திருக்கிறது. குட்டியாக, குண்டாக இருக்கும் போஜ்ஜியை அவனது அன்பு, பரிவை நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. சீசனின் இறுதிக்கட்ட எபிசோடுகளில் எல்லாம் போஜியின் திறமை நம்மை வியக்க வைக்கும். திறமைக்கு உருவம் பொருட்டில்லை, முறையான பயிற்சியும், தன்னை கண்டடைவதுமே அவசியம் என்பதை சொல்லும் யாரையுமே கொல்லாமல் வெல்லும் ஒரு அரசன் போஜ்ஜி.


இந்த ரேங்கிங் ஆஃப் கிங்ஸ் ஜப்பானிய மொழியில் Ousama Rankingu என்ற பெயரில் சோசுகே டோக்கா என்பவர் எழுதி மாங்கா தொடராக வெளிவந்தது. பின்னர் யோசுக்கே ஹட்டா, மகோடோ ஃபுஷிகாமி இயக்கத்தில் அனிமே தொடராகவும் முதல் சீசனை வெற்றிகரமாக முடித்து, இரண்டாவது சீசனும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

POPULAR POSTS

shakshi agarwal
simbu maniratnam
vijay
irfan view
sivakarthikeyan
ajith
To Top