Movie Reviews
நாய்களின் அன்பிற்கு இல்லை எல்லை – 777 சார்லி திரைப்பட விமர்சனம்
தென்னிந்திய சினிமா என கூறினாலே பலருக்கும் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்கள்தான் நினைவிற்கு வரும். ஆனால் நாங்களும் இருக்கிறோம் என கன்னட சினிமா அடிக்கடி நமக்கு நினைவுப்படுத்தும் வகையில் சில படங்களை கொடுத்துக்கொண்டே வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் கன்னட சினிமாவில் வெளியாகி இந்திய அளவில் பேசப்பட்ட மிக முக்கியமான திரைப்படம்தான் 777 சார்லி. நாய்களின் அன்பிற்கு எல்லையே இல்லை என்ற வசனத்தை உண்மையாக்கும் ஒரு படம்.
படத்தின் கதை
தர்மா என்கிற நமது ஹீரோ கதாபாத்திரம் தனது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவன். அன்று முதல் தனியாக வாழக்கூடிய ஒரு வாழ்க்கைக்குள் செல்கிறான். அவனுக்கென்று சிரிக்கவோ, அழவோ எந்த ஒரு உறவும் கிடையாது. தினமும் வேலைக்கு செல்வான், வீட்டிற்கு வருவான், மது அருந்துவிட்டு இட்லி உண்டுவிட்டு உறங்குவான். சார்லி சாப்ளின் நிகழ்ச்சிகளை பார்ப்பான். இதுதான் தர்மாவின் தினசரி விஷயங்கள்.

இப்படியான இவனது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு நாய்தான் சார்லி. ஒரே வயிற்றில் பிறந்த நாய்களை சட்ட விரோதமாக ஒன்றிணைத்து நாய்க்களை உற்பத்தி செய்து வரும் கும்பல் ஒன்று உள்ளது. அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த லேபரடார் என்கிற இனத்தை சேர்ந்த சார்லி பல கிலோ மீட்டர் பயணம் செய்து தர்மாவை வந்தடைகிறது.
முதலில் தர்மாவிற்கும், சார்லிக்கும் சுமூகமான உறவு இல்லாமல் போனாலும் போக, போக அவனுக்கு சார்லியை பிடித்துவிடுகிறது. இதுவரை வாழ்வில் எந்த ஒரு பிடிப்புமே இல்லாத தர்மா, சார்லின் அன்பினால் ஒரு புது உலகிற்குள் பயணிக்க துவங்குகிறான். அவனுக்கான பெரும் உறவாக இந்த பூவுலகில் சார்லி இருக்கிறது. அவனுக்கு இன்னும் பல உறவுகளையும் அது உருவாக்கி தருகிறது. அவனது குண நலன்கள் மாறுகிறது.

இந்த நிலையில் ஒரு அபாயமான தகவல் தர்மாவிற்கு தெரிகிறது. அது என்னவெனில் சார்லிக்கு புற்றுநோய் உள்ளது. ஒரே வயிற்றில் பிறந்த இரு நாய்களை வளர்த்து அவற்றை இணை சேர்த்தால் பிறக்கும் குட்டிக்கு பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது மனிதர்களில் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்தால் அது பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என கூறுவார்களே? அதே நிலைதான்?
சார்லியின் மிகப்பெரும் ஆசை என்னவெனில் பனிமலையில் விளையாட வேண்டும் என்பதுதான். எனவே சார்லியின் கனவை நனவாக்க நமது கதாநாயகன் அதை அழைத்துக்கொண்டு பைக்கில் இமாச்சல பிரதேசம் நோக்கி செல்கிறான். அந்த அழகான பயணம் அவனுக்கு என்னவெல்லாம் கொடுத்தது. சார்லி அவன் வாழ்வை எப்படி மாற்றி அமைத்தது என்பது சொச்ச கதை.
விமர்சனம்
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பு செய்வதற்கு ஒரு உயிராவது இருக்க வேண்டும். ஆனால் அது அனைத்து மனிதர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. அப்படி கிடைக்காத நபர்களுக்கு ஒரு பெரும் நண்பனாக நாய் உள்ளது. ஒரு நாய் மனிதனை விட சிறந்தது.

ஒரு நாய் நீங்கள் பணக்காரனா? பிச்சைக்காரனா? என பார்க்காது. நாயிற்கு எந்த எதிர்ப்பார்ப்பும் கிடையாது. விவசாயத்திற்கு முன்பு வேட்டை சமூகமாக இருந்த காலத்தில் இருந்தே நம்முடன் பயணிக்கும் முக்கியமான நண்பன் நாய். இந்த படத்தில் வளர்ப்பு இன நாய்களை விற்பனை செய்வதற்காக நடக்கும் சட்ட விரோத நிகழ்வுகள் பற்றி பேசியிருப்பது சிறப்பு.
படத்தின் கதாநாயனாகனாக நடித்துள்ள நடிகர் ரக்ஷித் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அனைவரும் ஒரு நாயையாவது தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் நீங்களும் தருமன் ஆகலாம் என கூறி படம் முடிகிறது.
படத்தில் உள்ள தவறுகள் என பார்த்தால் தெருவில் அவதியுறும் நாட்டு நாய்களை பற்றி படத்தில் பேசப்படவில்லை. அதையும் கொஞ்சம் தெளிவாக பேசி இருக்கலாம். ஆனால் எப்படி இருந்தாலும் 777 சார்லி ஒரு சிறப்பான படம். அமேசான் ப்ரைம் மற்றும் வூட் ஓடிடி தளங்களில் இந்த படம் காண கிடைக்கிறது.
