Cinema History
தமிழ் சினிமாவில் ஒரு செட்டுக்காக தயாரான படம் -என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனுக்காக கதை எழுதி கேள்விப்பட்டிருப்போம். கதாநாயகிக்காக கதை எழுதி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் படத்திற்காக போட்ட ஒரு செட்டுக்காக கதை எழுதின வரலாறு தமிழ் சினிமாவில் உண்டு.

1960 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், முத்துராம் நடித்து வெளியான திரைப்படம் படிக்காத மேதை. இந்த படத்தை ஹிந்தியில் மெகர்மா என்கிற பெயரில் படமாக்கி வந்தனர். ஏ.வி.எம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு வீடு செட் போட வேண்டி இருந்தது. இதற்காக பெரும் பொருட் செலவில் செட் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டது.
பட வேலைகள் முடிந்த பின்னும் செட் கலைக்கப்படாமல் இருந்தது. அந்த சமயத்தில் ஏ.வி.எம் சரவணன் இயக்குனர் ஏ.சி திரிலோக்சந்தரை அந்த செட்டை சுற்றி பார்க்க அழைத்து வந்தார். அதை பார்த்த அந்த இயக்குனர் செட் நன்றாக உள்ளது என கூறினார்.
இந்த நிலையில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு திடீரென ஒரு யோசனை வரவே அவர் இயக்குனர் ஏ.சி.திரிலோக்சந்தரை அழைத்து இந்த செட் நன்றாக உள்ளதா? எனக் கேட்டுள்ளார். இயக்குனரும் ஆம் நன்றாக உள்ளது என கூறியுள்ளார்.
அப்படியானால் இந்த செட்டில் எடுப்பதற்கு தகுந்த மாதிரி ஒரு கதையை தயார் செய் என கூறியுள்ளார் ஏ.வி.எம். உடனே யோசித்த இயக்குனர் இந்த செட்டிற்கு பேய் கதை எடுத்தால்தான் சரிவரும் என கூறியுள்ளார்.
அப்படி உருவானதுதான் அதே கண்கள் திரைப்படத்தின் கதை. அதே கண்கள் திரைப்படம் தமிழில் பயங்கரமான ஹிட் அடித்த ஒரு த்ரில்லிங் படமாகும். ஆனால் அதன் கதை உருவாவதற்கு ஒரு செட் காரணமாக இருந்துள்ளது.
