எஸ் பி பாலசுப்பிரமணியம் வாழ்க்கை வரலாறு

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்ற எஸ்.பி.பியின் பாடலை பலரும் கேட்டிருப்போம். அதற்கு ஒரு வாழும் உதாரணாமாகவே வாழந்த எஸ்.பிபியின் வாழ்க்கை வரலாற்றை இப்போது பார்க்கலாம்.

சுருக்க வரலாறு

பெயர்: ஶ்ரீபதி பண்டிதராத்யுலா பாலசுப்பிரமணியம்

பிறந்த தேதி: 4 ஜூன் 1946

பிறந்த இடம்: கெனட்டம்மபெட்டா, நெல்லூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்

பிரபலம்: நடிகர், பாடகர், இசை கலைஞர். டப்பிங் கலைஞர்.

தேசியம்: இந்தியன்

பாலினம்: ஆண்

வயது: 74

குடும்பம்

குழந்தை: பல்லவி மற்றும் எஸ்.பி.பி சரண்

இந்தியாவின் நிகரற்ற பாடகர்களில் முக்கியமானவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார். தென்னிந்தியாவில் இசை ரசிகராக இருக்கும் எவருக்கும் அதிகமாக தெரிந்திருக்கும் ஒரு பெயர்தான் எஸ்.பி.பி

இவரது முழு பெயர் ஶ்ரீபதி பண்டிதராத்யுலா பாலசுப்பிரமணியம் ஆகும். ஆனால் நாட்டிலுள்ள எண்ணற்ற ரசிகர்களால் இவர் எஸ்.பி.பி என்றே அடையாளம் காணப்படுகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தி, துலு, ஒரியா, படாகா, சமஸ்கிருதம், ஆங்கிலம், பெங்காலி, மாரத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

பாலு திரைப்படங்கள், தனியார் ஆல்பங்கள், டி.வீ சீரியல்கள் என 40,000த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

ஆரம்பக்கால வாழ்க்கை

எஸ்.பி.பி 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று ஆந்திர பிரதேசத்தில் நெல்லூருக்கு அருகிலுல்ல கெனட்டம்மபெட்டா என்னும் ஊரில் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

எஸ்.பி.பிக்கு உடன் பிறந்தோர் இரண்டு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் இருந்தனர். எஸ்.பி.பி அவர்களது வீட்டில் இரண்டாவது குழந்தையாக இருந்தார். இவரது தந்தை எஸ்.பி.சம்ப மூர்த்தி ஒரு இசை கலைஞராக இருந்தார். மற்றும் அவரது சகோதரி எஸ்.பி. சைலஜா டோலிவுட்டில் முன்னாள் நடிகை மற்றும் பாடகியாக இருந்தார். எஸ்.பி.பிக்கு பல்லவி மற்றும் எஸ்.பி.பி சரன் என்ற பிள்ளைகள் உள்ளனர்.

பாடல் மற்றும் கல்வி

எஸ்.பி.பி சிறு வயது முதலே பாடுவதை ஒரு பொழுது போக்காக செய்து வந்தார். தனது ஆரம்பக்கால வாழ்க்கை முதலே அவருக்கு இசை மீது தீராத ஆர்வம் இருந்தது. அதன் பிறகு அவர் இசை குறியீடுகளை கற்றுக்கொண்டார். பின்பு புல்லாங்குழல் ஹார்மோனியம் போன்ற இசை கருவிகளையும் வாசிக்க கற்றுக்கொண்டார். அவர் சிறுவயதில் டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் தனது ஆரம்ப கால கல்வியை இடை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பாலு வளர்ந்த பிறகு அவர் பொறியியல் படிக்க வேண்டும் என அவரது தந்தை விரும்பினார். ஆனால் பொறியியல் படிக்கும்போதும் பாலு இசையின் மீதே ஆர்வமாக இருந்தார். கல்லூரி பாடல் நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் பல பாடல் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றார்.

இசை வாழ்க்கை

1964 ஆம் ஆண்டு மெட்ராஸை தளமாக கொண்ட தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த சிறு வயதுடைய பாடகர்களுக்கான இசை போட்டியில் இவர் முதல் பரிசை வென்றார். அது அவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. இசையமைப்பாளரான எஸ்.பி.கோண்டபாணி என்பவர் பாலுவை தனது குழுவில் சேர்த்துக்கொண்டார்.

பின்னர் அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் வேலை செய்தார்.

1960 மற்றும் 70கள்

. எஸ்.பி.பி ஒரு முழு சினிமா பாடகராக மாறுவதற்கு முன்பு அவர் இசை குழுவின் தலைவராக இருந்தார். பாலசுப்பிரமணியம் 1966 டிசம்பர் 15 அன்று ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மரியதா ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதன் முதலில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

அதன் பிறகு 1966 இல் கன்னட நகைச்சுவை நடிகரான டி.ஆர் நரசிம்மராஜூ நடித்த நக்கரே அடே ஸ்வர்கா என்ற படத்தில் பாடினார். இவர் 1969 ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்கிற படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி” என்னும் பாடலை பாடினார்.

அதன் எம்.ஜி.ஆரின் அடிமை பெண் திரைப்படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்னும் பாடலை பாடினார். அதன் பிறகு அவர் மலையாளத்திலும் அறிமுகமானார். மலையாளத்தில் ஜி.தேவராஜன் நடித்த கடல்பலம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

எந்த ஒரு பாடகருக்கும் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடுவது சிரமமான காரியமாகும். ஆனால் அதிக பாடல்களை பாடுவதில் மிகப்பெரும் திறமையாளராக பாலசுப்பிரமணியம் இருக்கிறார். 1981 பிப்ரவரி 8 ஆம் தேதியன்று காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் அவர் அதிகப்பட்சமான பாடல்களை பாடினார்.

அப்போது அவர் பெங்குளூரில் இருந்தார். அவர் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக கன்னடத்தில் 21 பாடல்களையும், தமிழில் 19 பாடல்களையும் இந்தியில் 16 பாடல்களையும் பாடியுள்ளார். அவரது வாழ்நாளில் இது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவர் சினிமாவில் இருந்த சம காலத்தில் இந்தியாவின் மிக முக்கிய பாடகர்களில் ஒருவராக எஸ்.பி.பி இருந்தார்.

இவர் 1970 காலக்கட்டத்தில் தமிழில் புகழ்பெற்ற பிரபலங்களான எம்.எஸ். விஸ்வநாதன், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் பணியாற்றினார். பி.சுஷிலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல்.ஆர் ஈஸ்வரி போன்ற பிரபல பின்னணி பாடகிகளுடன் டூயட் பாடல்களில் பணிப்புரிந்தார்.

இளையராஜா சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பாலசுப்பிரமணியமும் இளையராஜாவும் நட்பில் இருந்தனர்.

1980 களில் சர்வேதேச அங்கீகாரம்

1980 களில் பாலசுப்ரமணியம் சங்கராபரணம் திரைப்படத்தில் பாடிய பாடல் மூலம் அவர் சர்வேதேச அளவில் பேசப்பட்டார். இந்த திரைப்படம் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும். கே.விஸ்வநாத் இயக்கி கே.வி மகாதேவன் இசையமைத்த இந்த படம் தெலுங்கு சினிமாவில் கருநாடக இசையின் முக்கியத்துவம் அதிகரிக்க வழிவகுத்தது.

இந்த படத்தில் அவர் பாடிய “ஓம் கர நதனு” என்ற பாடலுக்காக பாலசுப்பிரமணியம் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். அதன் பிறகு 1981 ஆம் ஆண்டு ஏக் துஜே கே லியே என்கிற திரைப்படம் ஹிந்தியில் அவரது முதல் படமாக அமைந்தது. அந்த படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார்.

பாலசுப்பிரமணியம் தமிழில் ஜானகி மற்றும் இளையராஜாவுடன் அதிக பாடல்களை பதிவு செய்தார். இந்த மூவர் கூட்டணியானது 1970 களில் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வெற்றிக்கரமான கூட்டணியாக இருந்தது. 1980 களில் சங்கரா சங்கம் (1983) படங்களில் இளையராஜா மற்றும் எஸ்.பி.பி இருவரும் கூட்டு சேர்ந்து அதன் விளைவாக இருவருமே தேசிய விருது பெற்றனர்.

அதே போல அவர்கள் 1986 இல் சுவாதி முத்யம் மற்றும் 1988 இல் வந்த ருத்ரவீணா போன்ற படங்களிலும் இருவரும் தேசிய விருதை வென்றனர்.

1989 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த மைனே பியார் கியா வில் பின்னணி பாடகராக இருந்தார். தில் தீவானா என்கிற படத்திற்காக அவர் சிறந்த பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

காதல் பாடல்களை பாடுவதில் சிறந்த பின்னணி பாடகராக பாலசுப்பிரமணியம் இருந்தார். அவர் பாலிவுட்டில் பாடிய ஹம் ஆப்கே ஹை கவுன், திதி தேரா தேவர் தீவானா ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானது. இதன் மூலம் எஸ்.பி.பி முக்கியமான பின்னணி பாடகர்களில் ஒருவரானார்.

1990

1990 களில் அவர் வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் தேவா போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். ஆனால் ஏ.ஆர்.ரகுமானுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட நட்பின் மூலம் அவர்கள் பல வெற்றிகளை கண்டனர்.

கன்னடத்தில் ஹம்சலேகா என்னும் இசையமைப்பாளருடன் அவருக்கு நல்ல உறவு ஏற்பட்டது. இவர்கள் இருவர் கூட்டணியில் கன்னடத்தில் அதிகப்படியான பாடல்கள் வெளியாயின. கன்னட திரைப்படமான கணயோகி பஞ்சகஷரி கவாய் (1995) திரைப்படத்தில் அவர் பாடிய “உமாண்டு குமண்டு” பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான நான்காவது தேசிய விருதை பெற்றார்.

பாலசுப்பிரமணியம் ஏ.ஆர் ரஹ்மானின் முதல் படமான ரோஜாவில் அவருக்கு மூன்று பாடல்களை பாடி கொடுத்தார். அவர்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு நல்ல உறவில் இருந்தனர். அவர் பாடகி அனுபமாவுடன் கிழக்கு சீமையிலே படத்தில் பாடிய “மானுத்து மந்தையிலே” பாடல் அனுபமாவுக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.

அனைத்து விதமான பாடல்களையும் பாடினாலும் அதிகபட்சம் அவர் காதல் டூயட் பாடல்களையே பாடினார். தமிழில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான மின்சார கனவு படத்தில் அவர் பாடிய “தங்க தாமரை நிலவே” பாடல் அவருக்கு ஆறாவது தேசிய விருதை பெற்று தந்தது.

2000 லிருந்து தற்போது வரை

விஷால் சேகரின் இசையமைப்பில் ஷாருக்கான் நடித்து வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் முதல் பாடலை 2013 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பாலிவுட்டில் பாடிய பாடலாகும். 2010 க்கு பிறகு அவர் முன்பு போல் அதிகமாக பாடல்கள் பாடவில்லை என்றாலும் சொற்பமான அளவில் பாடல்கள் பாடியுள்ளார்.

டப்பிங் கலைஞர்

கமலஹாசன் நடித்து தமிழில் வெளியான மன்மத லீலை திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. அப்போது அந்த படத்தில் பாலசுப்பிரமணியம் டப்பிங் கலைஞரானார். அதன் பிறகு அவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், கே.பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரிஷ் கர்நாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்ஜா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு பல்வேறு மொழிகளில் அவர்களது குரல்களுக்கு டப்பிங் பேசினார்.

கமலஹாசன் தமிழில் நடித்த தசாவதாரம் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. அதில் கமலஹாசன் நடித்த பத்து கதாப்பாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாபாத்திரம் உட்பட) எஸ்.பி.பி டப்பிங் குரல் கொடுத்தார். அன்னாமையா என்ற திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருது கிடைத்தது.

காந்தி திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்கு இவர் டப்பிங் செய்தார்.

சூப்பர் ஸ்டாருடன் நட்பு

தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் நல்ல நட்பு இருந்தது. அதிகப்பட்சம் ரஜினிகாந்த் தனது படத்தின் முதல் பாடலை பாலசுப்பிரமணியத்தையே பாட செய்வார். தற்போது வெளியான தர்பார் வரை பல படங்களுக்கு முதல் பாடலை எஸ்.பி.பியே பாடினார். அப்படியாக அவர் பாடிய பாடல்கள்

 • அண்ணாமலை- வந்தேண்டா பால்காரன்
 • முத்து- ஒருவன் ஒருவன் முதலாளி
 • பாட்ஷா- நான் ஆட்டோக்காரன்
 • அருணாச்சலம்- அதான்டா இதான்டா
 • படையப்பா- என் பேரு படையப்பா
 • சந்திரமுகி- தேவுடா தேவுடா
 • சிவாஜி- பல்லேலக்கா
 • கோச்சடையான்- எங்கே போகுதோ வானம்
 • லிங்கா- ஓ நண்பா
 • பேட்ட- மரண மாஸ்
 • தர்பார்- நான்தாண்டா இனிமேலு

ஆகிய பாடல்களை ரஜினிகாந்த் படத்தில் முதல் பாடலாக எஸ்.பி.பி பாடியுள்ளார்.

சாதனைகள்

50 ஆண்டுகளில் 40,000 க்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற உள்ளது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, துலு, ஒரிசா, அசாமி, படகா, சமஸ்கிருதம், கொன்கினி, பெங்காலி, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய 14 மொழிகளில் பாலசுப்பிரமணியம் பாடல்கள் பாடியுள்ளார். இந்தியாவிலேயே இத்தனை மொழியில் பாடிய பாடகர் இவர் மட்டுமே.

1981 பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பெங்களூரில் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 17 பாடல்களைப் பதிவு செய்துள்ளார். ஒரே நாளில் 17 பாடல்களை பதிவு செய்ததால் இது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதே போல பாலு ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் 19 பாடல்களையும், இந்தி மொழியில் 16 பாடல்களையும் இசை இயக்குனர்கள் ஆனந்த் மற்றும் மிலிந்த் ஆகியோருக்காக பதிவு செய்தார்.

விருதுகள்

இவர் இதுவரை ஆறுமுறை சிறந்த ஆண் பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

1996 இல் வெளியான பவித்ரா பந்தம் என்ற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார்.

1990 இல் வெளியான கேளடி கண்மணி திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

பிலிம் பேர் விருதுகளில் இதுவரை அவர் பத்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் மூன்று முறை விருது பெற்றார்.

ஒரு பாடகராக, நடிகராக, டப்பிங் கலைஞராக இந்திய சினிமாவில் முக்கியமான கலைஞராகவும் தனது பாடல்கள் வழியாகவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றென்றும் சாகா வரம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

Refresh