சினிமாவில் வெள்ளையாக இருந்தால்தான் கதாநாயகனாக, கதாநாயகியாக ஆக முடியும் என்கிற மனநிலை பெரும்பான்மையாக இருந்தாலும் பல நடிகர்களும் நடிகைகளும் அதை தொடர்ந்து உடைத்து உள்ளனர்.
அப்படியான நடிகர்களில் நடிகர் முரளியும் ஒருவர். நடிகர் முரளி கருப்பான தேகத்தில் இருந்தாலும் கூட அவரது நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்றே கூறலாம். 1984 இல் வெளிவந்த பூவிலங்கு என்கிற திரைப்படம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியது. அப்படி அறிமுகமான பிரபலங்களில் நடிகர் முரளியும் ஒருவர்.
முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்றார் முரளி. எந்த ஒரு படத்தையும் பிடித்துவிட்டால் உடனே அதில் கமிட் ஆகிவிடுவார் முரளி. இப்படி ஒருமுறை அவசர அவசரமாக வெளிநாட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கும்போது ஒரு படத்திற்கான வாய்ப்பு அவருக்கு வந்தது.
இயக்குனர் கதிர் அப்போது கதை சொல்வதற்காக வந்திருந்தார். ஆனால் அவசரமாக கிளம்பி கொண்டிருந்ததால் படத்திற்கு கதை கேட்க நேரமில்லாமல் இருந்தார் முரளி. இருந்தும் இயக்குனரிடம் நீங்கள் கதை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டார்.
2 மணி நேரம் ஆகும் என இயக்குனர் சொல்ல அவ்வளவு நேரமெல்லாம் இல்லை என முரளி கூறியுள்ளார். உடனே இயக்குனர் சார் நான் ஒரு நிமிடத்தில் கதையை சொல்கிறேன் என கதையை கூற துவங்கினார்.
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு மருத்துவம் படிக்க ஒரு இளைஞன் வருகிறான். ஆனால் திரும்ப அவன் கிராமத்திற்கு செல்லும்போது மருத்துவனாக செல்லவில்லை மாறாக நோயாளியாக செல்கிறான் என கூறுகிறார். இதை கேட்ட முரளி ஏன் என கேட்க அவன் காதல் தோல்வியடைகிறான் என்கிறார் இயக்குனர் கதிர்.
பிறகு கதையை கொஞ்சம் விரிவாக கேட்ட முரளி அந்த கதைக்கு ஓ.கே சொல்கிறார். அந்த கதைதான் பிறகு இதயம் என்கிற பெயரில் வெளியானது. அதற்கு பிறகு முரளி பெயரும் இதயம் முரளி என்றானது.