Cinema History
“இப்படிலாம் படம் எடுத்தா சோலியை முடிச்சிவிட்டுடுவாங்க”-பயந்துப்போய் டக்குன்னு கதையை மாற்றிய பாரதிராஜா, இப்படி எல்லாம் நடந்திருக்கா?
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக விளங்கியவர் பாரதிராஜா. இவரின் முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தது என்று கூறுவார்கள். “16 வயதினிலே” திரைப்படத்தை தொடர்ந்து “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “நிறம் மாறாத பூக்கள்” ஆகிய தொடர் வெற்றிகளை கொடுத்தார் பாரதிராஜா.
இந்த தொடர் வெற்றிகளுக்குப் பிறகு அவர் இயக்கிய “நிழல்கள்” திரைப்படம் சரியாக போகவில்லை. இத்திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய கிளாசிக் திரைப்படம்தான் “அலைகள் ஓய்வதில்லை”. இத்திரைப்படம் 1981 ஆம் ஆண்டு வெளியானது.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த கார்த்திக், ராதா ஆகியோர் அறிமுகமான திரைப்படம் “அலைகள் ஓய்வதில்லை”. ஒரு பிராமண இளைஞன் கிறுஸ்துவ பெண்ணை காதலிக்கிறான். மதம் கடந்த இவர்களின் காதலுக்கு எதிர்ப்புகள் எந்தெந்த ரூபத்தில் வருகின்றன, இறுதியில் இளம்ஜோடி மதத்தை தேர்ந்தெடுத்தார்களா? அல்லது காதலை தேர்ந்தெடுத்தார்களா? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.
ஆனால் முதலில் இத்திரைப்படத்திற்கு ஒரு பிராமண இளைஞன் இஸ்லாமிய பெண்ணை காதலிப்பது போன்றுதான் கதையை அமைத்திருந்தனராம். இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று பலரும் கூற, தயக்கமடைந்த பாரதிராஜா ஒரு பிராமண இளைஞன் கிறுஸ்துவப் பெண்ணைக் காதலிப்பது போன்று கதையை மாற்றி அமைத்துவிட்டாராம்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” என்ற பாடலில் கூட “கோவிலிலே காதல் தொழுகை” என்று ஒரு வரியை எழுதியிருப்பார் வைரமுத்து. ஒரு பிராமண இளைஞனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை உணர்த்துவதற்காகத்தான் இப்படி ஒரு வரியை வைரமுத்து எழுதியிருக்கிறார். அதன் பின் கதை மாறினாலும் பாடல் வரிகள் மாறவில்லை. இப்பாடல் இப்போதும் ரசிகர்களால் ரசித்துக் கேட்கக்கூடிய பாடலாக அமைந்துள்ளது.
“அலைகள் ஓய்வதில்லை” திரைப்படம் காலத்தை கடந்து நிற்கும் ஒரு மதநல்லிணக்கத் திரைப்படமாக உருவானது. இளையராஜாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்திற்கான கதையை எழுதியவர் மணிவண்ணன். இத்திரைப்படத்தை பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் இளையராஜாவின் அண்ணனான பாஸ்கர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.