News
கேஜிஎப் நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கிய லோக்கி? பேன் இந்தியா படமாம்!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக உயரிய புகழை அடைந்த இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ்.

’மாநகரம்’ படத்தில் தனது கெரியரை தொடங்கியவருக்கு ‘கைதி’யின் வெற்றி பெரும் திருப்பு முனையாக அமைந்தது. கைதி இயக்கிக் கொண்டிருக்கும்போதே ‘மாஸ்டர்’ படத்திற்கான வேலை, ‘மாஸ்டர்’ போய்க் கொண்டிருக்கும்போதே ‘விக்ரம்’ படத்திற்கான வாய்ப்பு என தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
தற்போது ‘விக்ரம்’ கொடுத்துள்ள மிகப்பெரும் வெற்றி லோகேஷை ரொம்ப பிஸியாக்கியுள்ளது. அடுத்து ‘தளபதி 67’, ‘கைதி 2’, ‘விக்ரம் 3’ என படு பிசியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்கள் பலரும் லோகேஷை தங்களுக்கு படம் பண்ண சொல்லி கேட்டு வருகிறார்களாம்.
ஆனால் எல்லாருக்கும் முந்திக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக லோகேஷுக்கு கொடுத்து வைத்திருக்கிறார்களாம் ஹொம்பாலே பிலிம்ஸ். பேன் இந்தியா படமான கேஜிஎஃப்-ஐ வைத்து பெரும் வெற்றி பெற்ற அவர்கள் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்களாம்.
அந்த வகையில் லோகேஷுக்கு முன்பணம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்களாம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் மாநகரம் உள்ளிட்ட முந்தைய படங்கள் கூட இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருவதால். லோகேஷை வைத்து பிரம்மாண்டமான பேன் இந்தியா படம் ஒன்றை உருவாக்கும் திட்டம் அவர்களுக்கு இருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. எப்படி இருந்தாலும் கையில் உள்ள 3 படங்களையும் முடித்துவிட்டுதான் அடுத்த கட்ட படங்கள் குறித்து யோசிக்கலாம் என லோகேஷ் உள்ளாராம்.
