கமல் படம் 100 நாள் ஹிட்டு.. அரெஸ்ட் பண்ண ஆள் அனுப்பிய எம்ஜிஆர்!
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக அறியப்படுபவர் கமல்ஹாசன். 1970 காலகட்டம் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரம் என்பதை தாண்டி ஒரு இளம் நடிகராக மெல்ல தமிழ் சினிமாவில் பெயர் எடுக்க தொடங்கியிருந்த காலம். அப்போதுதான் டி.என்.பாலு என்பவர் தயாரித்த ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்தார். அந்த படத்தை டி.என்.பாலுவே இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சத்யராஜுக்கு இது முதல்படமும் கூட. 1978ல் வெளியான அந்த படம் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்றது. கமல்ஹாசன் நடித்து முதல் முறையாக 100 நாள் தாண்டிய ஓடிய படமும் சட்டம் என் கையில்தான். இந்த 100 நாள் வெற்றியை கொண்டாட நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அதில் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கும், இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.என்.பாலுவுக்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது.
100 நாள் வெற்றி விழாவின்போது டி.என்.பாலுவை கைது செய்ய போலீஸார் வந்து விட்டனர். ஆனால் நிகழ்ச்சி முடியட்டும் என காத்திருந்துள்ளனர். நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்த டி.என்.பாலு சரியாக நிகழ்ச்சி முடிய சில நிமிடங்கள் இருக்கும்போது மேடையில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அதை கலைஞர் கருணாநிதி கண்டு கொண்டார்.
முடிவுரைக்கு முன்னதாக பேச வந்த கலைஞர் கருணாநிதி “சட்டம் என் கையில் என்ற படத்தை எடுத்தவர் உண்மையாகவே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்” என மேடையில் நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் கலைஞர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டுள்ளார்.