எந்திரன் கதையை காபி அடிச்சி ஹாலிவுட்டில் படம்.. வெளியானது மேகன் 2.0 ட்ரைலர்..!
தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுக்க பிரபலமான திரைப்படம்தான் எந்திரன். இந்த திரைப்படம் வந்தப்போது தமிழ் சினிமாவிற்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பமே புதிய விஷயமாக இருந்தது. அதனால் இந்த படம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அடுத்து அதன் தொடர்ச்சியாக 2.0 என்கிற திரைப்படமும் வந்தது. இது அனைவருக்குமே தெரியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை அமைப்பில் ஹாலிவுட்டில் உருவான ஒரு திரைப்படம்தான் மேகன்.
எந்திரன் திரைப்படத்தில் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக உருவாக்கப்படும் ரோபோ பிறகு தீய சக்தியாக மாறிவிடும். அதே போல மேகன் திரைப்படத்திலும் ஒரு குழந்தையை பாதுக்காப்பதற்காக ரோபோவை உருவாக்குகின்றனர்.
ஆனால் அந்த ரோபோ குழந்தையை பாதுகாப்பதற்காக சுற்றி இருப்பவர்களை எல்லாம் கொலை செய்ய நினைக்கிறது. தொடர்ந்து கெட்ட வழியில் செல்லும் ரோபோவை இறுதியில் அடக்குகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர் தற்சமயம் வெளியானது. இந்த ட்ரைலரின் படி மேகனின் நினைவுகளை எடுத்து அதை அப்படியே ஒரு ப்ளாஸ்டிக் ரோபோவுக்குள் செலுத்துகின்றனர்.
இதனால் மேகனால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு நடுவே மேகனை விடவும் அதிக தீய குணங்களை கொண்ட அமேலியா என்கிற இன்னொரு ரோபோட்டை யாரோ தயாரித்து விடுகின்றனர். அது விஞ்ஞானியான கெம்மா ஃபாஸ்டரையும் அவளது மகள் கேடியையும் கொல்ல நினைக்கிறது.
இந்த நிலையில் முதல் பாகத்தில் வில்லியாக இருந்த மேகன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்த குடும்பத்தை காப்பாற்ற களம் இறங்குகிறது.
கிட்டத்தட்ட தமிழில் வந்த 2.0 திரைப்படத்திலும் பக்ஷி ராஜனை அழிப்பதற்காக முதல் பாகத்தில் வந்த பேட் சிட்டியை வரவழைப்பார்கள். அதே கதை அம்சத்தை கொண்டுள்ளது மேகன் 2.0 திரைப்படம்.