இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது முதலே படத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்த வண்ணம் இருக்கிறது.
ஒரு பக்கம் இந்த பெயர் நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் பெயர் என்பதால் அதை எஸ்.கே படத்துக்கு வைக்க கூடாது என ஒரு பக்கம் கூறி வந்தனர். இன்னொரு பக்கம் அதே பெயரை நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படத்திற்கும் வைத்துள்ளனர்.
விஜய் ஆண்டனி தமிழை தவிர்த்து தெலுங்கு மாதிரியான மற்ற மொழிகளில் அவர் நடிக்கும் சக்தி திருமகன் திரைப்படத்திற்கு பராசக்தி என பெயர் வைத்துள்ளார். அதே சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படமும் கூட மற்ற மொழிகளில் பராசக்தி என்கிற பெயரிலேயே வெளியாகிறது.
இந்த பெயர் பிரச்சனைக்கு நடுவே ஏ.வி.எம் நிறுவனத்திடம் இருந்து பராசக்தி திரைப்படத்திற்கான தமிழ் உரிமத்தை வாங்கிய சான்றுகளை எஸ்.கே தரப்பினர் வெளியிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலுங்கில் பராசக்தி என்னும் பெயரை பதிவு செய்திருக்கும் சான்றை விஜய் ஆண்டனி தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் உண்மையில் பராசக்தி திரைப்படத்தை தயாரித்தது நேஷனல் பிக்சர்ஸ் என்னும் நிறுவனம்தான், ஏ.வி.எம் நிறுவனம் அந்த படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனம் தான். எனவே பராசக்தி திரைப்படத்திற்கான உரிமத்தை நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்திடம்தான் பெற வேண்டும் என பேச்சுக்கள் சென்றுக்கொண்டுள்ளன.
ஏற்கனவே தெலுங்கில் பெயரை பதிவு செய்துள்ள விஜய் ஆண்டனி தரப்பினர் இப்போது தமிழிலும் வாங்கிவிட்டால் எஸ்.கே படத்தின் பெயர் மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும். 25 ஆவது படத்தில் இப்படி ஒரு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார் எஸ்.கே.