நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்தே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தலைநகரம் திரைப்படத்தின் கதை அமைப்பை கொண்டுள்ளது. படத்தின் கதைப்படி ஜோஜு ஜார்ஜ் ஒரு ரவுடியாக இருக்கிறார். அவரது வீட்டின் செக்யூரிட்டியின் மகனாக சூர்யா இருக்கிறார். செக்யூரிட்டி ஒரு நாள் இறந்துவிட சூர்யா ஜோஜு ஜார்ஜ் வீட்டிலேயே வளர்கிறார்.
ஆனால் அவருக்கு சூர்யாவை பிடிக்காமலே இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் ஜோஜு ஜார்ஜ் உயிருக்கு ஆபத்து வருகிறது. அதிலிருந்து சூர்யாதான் அவரை காப்பாற்றுகிறார். இந்த நிலையில் ஜோஜு ஜார்ஜ்க்கு பிடித்த நபராக சூர்யா மாறுகிறார்.
இதனை தொடர்ந்து பூஜா ஹெக்தே மீது சூர்யாவிற்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் இந்த ரவுடிசத்தை விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வேன் என கூறுகிறார் பூஜா ஹெக்தே. எனவே ரவுடி தொழிலை விட நினைக்கிறார் சூர்யா.
அதற்கு பிறகு அவருக்கு வரும் இடையூறுகள்தான் கதையாக இருக்கிறது. கிட்டத்தட்ட சுந்தர் சி நடித்த தலைநகரம் திரைப்படத்திலும் கூட இதே மாதிரியான கதை அம்சம் இருப்பதை பார்க்க முடியும்.