இளையராஜாவை இசையின் அரசன் என அழைக்கப்படுவதை பலரும் கேட்டிருப்போம். தமிழ் சினிமாவில் இருப்பவர்களே இளையராஜாவிற்கு நிகரான ஒரு இசையமைப்பாளர் கிடையாது என கூறுவதுண்டு. அதற்கு உதாரணமாக பல விஷயங்களை இளையராஜா செய்துள்ளார்.
அதில் முக்கியமான ஒரு விஷயம் ராஜ்கிரண் நடித்த திரைப்படத்தில் நடந்தது. 1993 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை கிளி. ராஜ்கிரண் படத்திலேயே பயங்கரமான ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம். ராஜ்கிரணே நடித்து இயக்கிய திரைப்படம்.
இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார். ஏற்கனவே இளையராஜாவிடம் இதுக்குறித்து பேசி வைத்துவிட்டனர். ஆனால் இசையமைக்க இருந்த அந்த குறிப்பிட்ட நாளில் இளையராஜாவிற்கு வேறு வேலை இருந்தது. 10 மணிக்கு அவர் வெளியில் கிளம்ப வேண்டி இருந்தது.
எனவே ராஜ்கிரணை அழைத்து 7 மணிக்கெல்லாம் வர சொல்லிவிட்டார். மறுநாள் ராஜ்கிரணும் ஏழறை மணிக்கெல்லாம் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் போய் நிற்கிறார். உள்ளே சென்று பார்த்தால் ஏற்கனவே அங்கு இளையராஜா அமர்ந்துள்ளார்.
படத்தில் எத்தனை பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என கேட்டார் இளையராஜா. மொத்தம் 7 பாட்டு ஐயா என கூறியுள்ளார் ராஜ்கிரண். பிறகு ஒவ்வொரு பாடலுக்கும் ராஜ்கிரண் காட்சியை கூற வரிசையாக இசையமைத்துள்ளார் இளையராஜா. 9.30 மணிக்குள் 7 பாட்டுக்கும் இசையமைத்து அதை கேசட்டில் பதிவேற்றி ராஜ்கிரண் கையில் கொடுத்துவிட்டார்.
அந்த ஏழு பாடல்களுமே மாஸ் ஹிட் கொடுத்தன. இளையராஜா எவ்வளவு பெரிய இசை அரசன் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்தது.