Tag Archives: ஹாலிவுட் சினிமா

ட்ரான்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் த பீஸ்ட் – பட்டையை கிளப்பும் மறு உருவாக்கம்!..

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் ட்ரான்ஸ்பார்மர்ஸ். செவர்லாட் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வெளியாகி இறுதியில் ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஒரு பிரபலமான படமானது.

அதில் மஞ்சள் நிறத்தில் வரும் பம்பிள் பி காரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ட்ரான்ஸ் பார்மர்ஸ் திரைப்படம் தொடர் திரைப்படமாக வருவதில் பல சிக்கல்கள் இருந்தன. பாகுபலி மாதிரி படத்தை கண்டின்யூ வைத்து கொண்டு போகாமல் தமிழில் வரும் முனி, அரண்மனை போல ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு கதை என சென்று கொண்டிருந்தது.

ஒவ்வொரு முறையும் ஆட்டோ பாட்களின் தலைவனான ஆப்டிமெஸ் ப்ரைம், டெசப்டிகான் என்னும் வில்லன்களின் தலைவனான மெகாட்ரானை கொல்லும். ஆனால் அடுத்த படத்தில் பார்த்தால் மீண்டும் வந்து முன்னால் நிற்கும் டெசப்டிகான். இதனால் சம்பவம் செய்ததற்கு ஒரு அர்த்தம் இல்லையா! என்கிற விரக்தி நம்மிடையேயும் இருக்கும்.

ஆனால் இந்த முறை மெய்யாலுமே முதலில் இருந்து புதுக்கதையாக எடுக்கிறோம் என களம் இறங்கியுள்ளனர். படத்தை ஸ்டீவன் கேப்பிள் ஜூனியர் இயக்கியுள்ளார். படக்கதைப்படி ட்ரான்ஸ்பார்மர்ஸ் போலவே ஆப்டிமல் என்கிற ஒரு வகையறாவும் உள்ளது. இந்த ஆப்டிமலில் ட்ரான்ஸ் பார்மர்ஸ் எல்லாம் ஆந்தை, குரங்கு,சிறுத்தை, காண்டாமிருகம் என விலங்குகளாக இருக்கும். ஆனாலும் அவையும் சரளமாக தமிழில் பேசக்கூடியவையே.

ட்ரான்ஸ்பார்மர்ஸ் தங்களது கிரகமாக சைப்ட்ரானுக்கு போக உதவும் ஒரு சாவியை யுனிக்ரான் என்னும் வில்லனிடம் இருந்து பாதுகாத்து பூமியில் ஒளித்து வைக்கின்றன ஆப்டிமல். ஏனெனில் அந்த சாவியை கொண்டு உலகங்களை உண்டு அதில்தான் உயிர்வாழும் யுனிக்ரான். இதனை அறிந்த வில்லன் டெரர்கான் என்னும் அடியாள் கூட்டத்தை அந்த சாவியை தேடி எடுத்து வர அனுப்புகிறான்.

இந்த நிலையில் சாவி நோவா டயாஸ் மற்றும் எலானா என்கிற இருவர் கையில் கிடைக்கிறது. இந்த சாவி கிடைப்பதற்கு முன்பே மிராஜ் என்கிற ஆட்டோபாட்டுடன் நண்பராகிறார் நோவா. இதன் மூலமாக ஆட்டோ பாட்ஸ், மனிதர்கள், ஆப்டிமல் மூன்று அணியும் இணைந்து அந்த சாவியை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவதே கதை.

இதில் ஆப்டிமல், ஆட்டோபாட்ஸ், மனிதர்கள் மூவரிடையே உள்ள உணர்வுரீதியான கட்டமைப்பை சிறப்பாக கையாண்டிருந்தார் இயக்குனர். படத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாகவே அமைந்தன. வழக்கமாக படத்தில் ஆப்டிமஸ் ப்ரைமிற்குதான் கெத்து அதிகமாக இருக்கும். அதுவும் படத்தில் ஒராயிரம் முறை நாந்தான் ஆப்டிமஸ் ப்ரைம் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்.

இந்த படத்தில் அதற்கு பதிலாக பம்பிள் பிக்கு மரண் மாஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. போஸ்ட் க்ரெடிட் பகுதியில் ட்ரான்ஸ்ப்ராமர்ஸை ஜீ.ஐ.ஜோ அணியோடு கோர்த்துவிட்டு புது வகையான காம்போவை க்ரியேட் செய்துள்ளனர்.

இந்த சம்மர் எண்டுக்கு ஒரு ட்ரீட்டாக ட்ரான்ஸ்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் பீஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஷூவுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா? – அமேசான் ப்ரைமில் வெளிவந்த சிறப்பான திரைப்படம்!..

திரைப்படங்கள் வெறுமனே மக்களுக்கு கேளிக்கையாக மட்டும் இல்லாமல் பல விஷயங்கள் குறித்து நம்மிடம் விவாதத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. அப்படி ஒரு சிறப்பான கதை களத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை திரைப்படமாக்கியுள்ளனர்.

ஏர் (Air) என்கிற இந்த திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைமில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ளது. ஒரு நிறுவனத்தை நடத்துவதில் உள்ள சிக்கல்களை மிகவும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளார் இந்த படத்தின் இயக்குனரான பென் அஃப்லெக்.

நைக் என்கிற காலணி நிறுவனம் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் நடந்த உண்மை விஷயத்தை கொண்டே ஏர் படத்திக் கதைகளம் அமைந்துள்ளது.

நம்மூரில் கிரிக்கெட் முக்கிய விளையாட்டாக இருப்பது போல அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டாக கூடைப்பந்து இருந்துள்ளது. 1984 காலக்கட்டத்தில் கூடைபந்து விளையாட்டு தொய்வை கண்டு வந்தது. இந்த நிலையில் கூடைப்பந்து ஷூக்களை வாங்குவதில் மக்களும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

எனவே கூடைப்பந்துக்கான ஷூக்களை போடுவதை நிறுத்திவிடலாம் என முடிவெடுத்தது நைக் நிறுவனம். மேலும் அப்போது வந்த ஆடிடாஸ் நிறுவனம் நைக் நிறுவனத்தை விட பலம் வாய்ந்த நிறுவனமாக இருந்தது. பிரபல கூடைப்பந்து வீரர்களை வைத்து சிறப்பாக விளம்பரம் செய்ததால் ஆடிடாஸ் நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருந்தது.

நைக் நிறுவனத்திடம் பெரிதாக காசு இல்லாததால் அவர்களால் பெரிய கூடைப்பந்து வீரர்களை வைத்து விளம்பரம் செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில்தான் கூடைப்பந்து வீரர் ஜோர்டன் கதைக்குள் வருகிறார். ஜோர்டன் அப்போதுதான் வளர்ந்து வரும் வீரராக இருக்கிறார். அதனால் எந்த நிறுவனமும் அவரை கண்டுக்கொள்ளவில்லை.

ஆனால் ஜோர்டான் ஒரு பெரும் விளையாட்டு வீரராக வருவார் என்பதை அப்போதே கணிக்கிறார் நைக் நிறுவனத்தை சேர்ந்த சன்னி வக்காரோ. இதற்காக அவர் ஜோர்டானிடம் பேசுகிறார். பிறகு ஜோர்டானின் பெயரிலேயே ஏர் ஜோர்டான் என்கிற ஷூவை வெளியிடுகிறது நைக் நிறுவனம்.

அந்த ஷூ நைக் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் ஏர் என்கிற இந்த திரைப்படம்.

பஸ் காருக்கு எல்லாம் உயிர் வந்து மனிதர்களை கொன்னு குவிச்சா எப்படி இருக்கும்? –  அதிர வைக்கும் திரைப்படம் மேக்ஸிமம் ஓவர் ட்ரைவ்!

ஹாலிவுட் சினிமாக்களில் விசித்திரமான திரைப்படங்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழ்நாட்டில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் போல ஆங்கிலத்தில் த்ரில்லர் நாவல் எழுதுவதற்கு என்றே பிரபலமாக உள்ள எழுத்தாளர்தான் ஸ்டீபன் கிங்.

ஸ்டீபன் கிங்கின் அதிகமான கதைகள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. இவர் எல்லாவிதமான கதைகளையும் எழுதுவார் என்றாலும் ஹாரர் கதைகளே இவரிடம் பிரபலமானவை. அப்படி அவர் எழுதி அவரே கதையாக்கிய திரைப்படம்தான் மேக்ஸிமம் ஓவர்ட்ரைவ்.

படத்தின் கதைப்படி அடையாளம் தெரியாத பச்சை நிற கதிர் ஒன்று பூமியை சூழ்ந்துக்கொள்கிறது. இந்த கதிர் ஏழு நாட்கள் பூமியை சுற்றி நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கதிரின் பாதிப்பால் பூமியில் உள்ள அனைத்து மின்சாரத்தால் இயங்கும் பொருட்களுக்கும் உயிர் வந்துவிடுகிறது. ஏ.டி.எம் மெஷின், ஹேர் ட்ரையரில் துவங்கி ட்ரக் வண்டிகள், ஏரோப்ளேன் என அனைத்திற்கும் உயிர் வந்துவிடுகிறது.

உயிர் வந்ததும் முதல் வேலையாக இவை அனைத்தும் மனிதனை கொல்வதற்கான வேலையில் இறங்குகின்றன. இந்த நிலையில் பல ட்ரக் வண்டிகளுக்கு நடுவே ஒரு கூட்டம் பெட்ரோல் வங்கியில் உள்ள ஒரு கடையில் மாட்டிக்கொள்கிறது. இந்த வண்டிகளிடம் இருந்து மனிதர்கள் தப்பிப்பதே கதையாக உள்ளது.

படத்தில் குறை என பார்த்தால் மின்சாதனங்களுக்கு உயிர் வருவதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ட்ரக் எல்லாம் உயிர் வந்து ஊருக்குள் சுற்றும்போது கார்களுக்கு மட்டும் உயிர் வரவில்லை. அந்த மாதிரி கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் சில மின்சார சாதனங்களுக்கு உயிர் வரவில்லை என்பது முரணான விஷயமாக இருந்தது.

அதை தவிர்த்து படம் ஒரு எண்டர்டெயின்மெண்ட் காம்போ ஆகும். 1986 இல் வந்தாலும் கூட இப்போதும் பார்ப்பவருக்கு ரசனையான படமாக மேக்ஸிமம் ஓவர்ட்ரைவ் இருக்கிறது.

கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி மூன்றாம் பாகத்தில் இந்த கதாபாத்திரம் இறக்கிறதா? –  திடீர் தகவல்!

மார்வெல் திரைப்படங்களை பொறுத்தவரை எந்த ஒரு திரைப்படமும் குறைந்த பட்சம் மூன்று பாகங்கள் வெளியாவது வழக்கம். அதே போலவே கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி படமும் எடுக்கப்பட்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டு கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் முதல் பாகம் வெளியானது. ஜேம்ஸ் கன் இயக்கிய இந்த படத்தில் பிரபல ரெஸ்லிங்  வீரரான டேவ் படிஸ்டா ட்ரக்ஸ் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி 2, அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.

அடுத்து நான்காம் பாகமும் எடுப்பதற்கு யோசனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்றாம் பாகத்திற்கு பிறகு படிஸ்டா மார்வெல் யுனிவெர்ஸை விட்டு விலகுவதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே மூன்றாம் பாகத்தில் ட்ரக்ஸ் கதாபாத்திரம் இறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்!

இதுவரை சினிமாவில் செய்யாத தொழில்நுட்பம்தான் காரணம்! – பார்வையாளர்களுக்காக அவதாரில் செய்த வேலை.

வெளியான நாள் முதல் திரையரங்குகள் அனைத்தையும் முழுமையாக்கி வரும் திரைப்படம் அவதார் 2. 90ஸ் கிட்ஸ்களில் துவங்கி பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த மிக முக்கியமான திரைப்படம்.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தனது மொத்த திறனையும் இறக்கி கிராபிக் தொழில்நுட்பத்தில் இதுவரை யாரும் செய்யாத அளவில் ரியாலிட்டியை கொண்டு வந்துள்ளார்.

பார்ப்பவரை வியக்க வைக்கும் வகையில் திரைப்படம் உள்ளது. படத்தில் 3டி தொழில்நுட்பத்திற்காக வெகுவாக வேலை செய்துள்ளனர். மற்ற படங்களில் உள்ள 3டி போல அல்லாமல் மேலும் சிறப்பாக இதில் 3டி தொழில்நுட்பம் உள்ளது.

மழை பெய்யும் காட்சிகளில் எல்லாம் திரையரங்குகளில் மழை பெய்கிறதா? என்கிற யோசனை வருகிறது. அதே போல சாதரணமாக வெளியாகும் திரைப்படங்களை விடவும் அனைவரின் அசைவுகளும் இந்த படத்தில் சற்று துல்லியமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

சாதரணமாக வெளியாகும் திரைப்படங்களில் ஒரு நொடிக்கு 24 frameகள் இருக்கும். ஆனால் அவதார் படத்தில் ஒரு வினாடிக்கு 48 ஃப்ரேம்கள் உள்ளது. இதுவே இந்த துல்லியத்திற்கு காரணமாக உள்ளது. இதற்கு முன்னர் 48 எஃப்.பி.எஸ் அளவில் வேறு எந்த படமும் வரவில்லை. அவதார் வே ஆஃப் வாட்டர் திரைப்படமே முதல் படம் என கூறப்படுகிறது.

திரையரங்குகளில் பார்ப்பவர்களால் மட்டுமே இந்த அனுபவத்தை எல்லாம் பெற முடியும் எனவும் கூறப்படுகிறது.