செண்டிமெண்ட் வேண்டாம், ஆக்‌ஷன்தான் வேணும் –  ரெண்டு க்ளைமேக்ஸில் உருவான ரஜினி படம்!

திரைப்படங்கள் உருவாகும்போது அதில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும். ஒரு இயக்குனர் எப்படி யோசிக்கிறாரோ அப்படியே ஒரு திரைப்படம் உருவாகி விடாது. படத்தின் கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் படத்தின் கதையில் மாற்றத்தை கேட்பர்.

இதனால் வெளியாகும் கடைசி நேரத்தில் கூட சில படங்களின் கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியான ஒரு மாற்றம் ரஜினி படத்திலும் நிகழ்ந்தது. எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு ரஜினி நடித்த தயாரான படம் நல்லவனுக்கு நல்லவன்.

இந்த படத்திற்கு ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் வருவது போல ஒரு செண்டிமெண்டான காட்சியை க்ளைமேக்ஸாக வைத்து திரைப்படம் தயாரிக்கப்பட்டது. சென்சாருக்கு அனுப்பி சென்சார் சான்றிதழும் பெற்றாகிவிட்டது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம் சரவணனுக்கு இந்த க்ளைமேக்ஸ் ஏனோ திருப்திகரமானதாக இல்லை. எனவே அவர் ரஜினியையும் எஸ்.பி முத்துராமையும் அழைத்து படத்தின் க்ளைமேக்ஸை ஆக்‌ஷனாக மாற்றி அமைத்தால் என்ன? என கேட்டுள்ளார்.

ஆனாலும் சென்சார் சான்றிதழ் எல்லாம் வாங்கியாகிவிட்டதே என தயங்கியுள்ளார் எஸ்.பி முத்துராம். அதையெல்லாம் சரி செய்து கொள்ளலாம் என ஏ.வி.எம் சரவணன் கூற சரி என ஆக்‌ஷன் காட்சியை படமாக்கி அதை க்ளைமேக்ஸாக இணைத்தனர்.

படம் வெளியான பிறகு இந்த க்ளைமேக்ஸை மக்கள் வெகுவாக ரசித்துள்ளனர். இதை பார்த்த எஸ்.பி முத்துராம் “நீங்க சொன்னதுதான் சரி. இந்த க்ளைமேக்ஸ் பிரமாதமா இருக்கு. மக்களும் ரசிக்கிறாங்க” என கூறியுள்ளார். இப்படியாக படம் வெளியாகும் இறுதி நேரத்தில் படத்தின் க்ளைமேக்ஸே மாற்றி அமைக்கப்பட்டது இந்த திரைப்படத்தில்தான் என கூறப்படுகிறது.