காமிக்ஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்

ஒரு காலத்தில் தமிழகத்தில் காமிக்ஸ் என்னும் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. காமிக்ஸ்கள் பலவும் கமர்சியல் திரைப்படங்களுக்கு இணையான கதைக்களத்தை கொண்டு நகர்பவை. இப்போதும் கூட தமிழ்நாட்டில் காமிக்ஸ் விரும்பிகள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை காமிக்ஸ் மீது ஆர்வம் கொண்ட பல இயக்குனர்கள், அந்த காமிக்ஸ் கதையையோ அல்லது அதில் ஒரு கதாபாத்திரத்தையோ தனது திரைப்படங்களில் வைப்பது உண்டு. அப்படி தமிழில் வந்த காமிக்ஸ் தொடர்பான சில திரைப்படங்களையும் அவை எந்த காமிக்ஸ் கதையில் இருந்து வந்தது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

வெற்றி விழா – XIII

13 என்கிற காமிக்ஸானது உலக அளவில் பிரபலமானது ஆகும். இந்த காமிக்ஸின் கதைப்படி 13 என கையில் பச்சை குத்திய ஒரு இளைஞன் முதல் காட்சியிலேயே கடற்கரையில் ஒதுங்குவான். அவனுக்கு அவன் யாரென்றே தெரியாது. அவனது பெயர் என்ன என்பது கூட தெரியாது. இந்நிலையில் அவனை கொல்ல சில மர்மமான ஆட்கள் அடிக்கடி வருவார்கள். அவர்களது கையிலும் கூட ஒரு எண் பச்சை குத்தியிருக்கும். அவன் தன்னை யார் என கண்டறிவதே கதையாக இருக்கும்.

இதே கதையை அடிப்படையாக கொண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெற்றி விழா என்கிற திரைப்படம் வெளியானது.

ராட்சசன் 

ராட்சசன் திரைப்படத்தின் இயக்குனருக்கு காமிக்ஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. அவர் எடுத்த ராட்சசன் படத்திற்கு மார்ட்டின் மிஸ்டரி என்கிற காமிக்ஸ்க்கும் இடையே தொடர்பு உண்டு. மார்ட்டின் மிஸ்டரியில் ஒரு கதையில் ஒரு கதாபாத்திரம் இருக்கும். தனது மகனின் இறப்பிற்காக பழி வாங்க நினைக்கும் அப்பா ஒருவர் வில்லனாக இருப்பார்.

ஆனால் இறுதியில் பார்க்கும்போது பையனே அப்பா வேடத்தில் அனைத்தையும் செய்திருப்பான். சிறு வயதிலேயே முதுமையாக தோற்றம் ஏற்படும் வியாதி ஒன்று அவனுக்கு இருந்திருக்கும். அதை வைத்து தன்னை தனது தந்தையாக வெளிப்படுத்தியிருப்பான்.

இந்த கதாபாத்திரத்தை போலவே ராட்சசன் திரைப்படத்தில் வில்லனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

சாஹோ, யோகன் அத்தியாயம் ஒன்று

லார்கோ வின்ச் என்கிற காமிக்ஸ் மிகவும் பிரபலமானது இதில் பிரபல பணக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்படுவார். அவருக்கு அடுத்து வாரிசு இல்லை என உலகமே நினைத்துக்கொண்டிருக்கும். எனவே அவரது சொத்துக்களை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் காத்திருக்கும். இந்நிலையில் லார்கோ வின்ச் என்கிற கதாபாத்திரம் அவரது வாரிசாக வந்து நிற்கும்.

இந்த கதையை தழுவி யோகன் அத்தியாயம் ஒன்று என்கிற படத்தை 2012 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்க திட்டமிட்டிருந்தார். இதில் விஜய் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் ஏனோ அந்த கதை படமாக்கப்படவில்லை. அதன் பிறகு பாகுபலி பிரபாஸ் நடித்து அதே கதையை சாஹோ என்கிற பெயரில் படமாக்கினர்.

இரும்புக்கை மாயாவி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் கூட காமிக்ஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. காமிக்ஸில் இரும்புக்கை மாயாவி என்றொரு காமிக்ஸ் உண்டு. இதில் ஒரு கை மட்டும் இரும்பாக கொண்ட கதாநாயகன், அந்த கையால் மின்சாரத்தை தொட்டால் மறைந்துவிடுவான். மேலும் அந்த இரும்புக்கை மிகவும் வலிமையானதாக இருக்கும்.

இந்த கதாபாத்திரத்தை கொண்டு இரும்புக்கை மாயாவி என்கிற பெயரில் சூர்யாவை வைத்து ஒரு படமெடுக்க திட்டமிட்டிருந்தார் லோக்கி. ஆனால் அந்த படம் இப்போது வரை எடுக்கப்படவில்லை. ஆனால் அந்த கதாபாத்திரம் மீது லோகேஷ்க்கு இருந்த ஈர்ப்பு காரணமாக மாஸ்டர் படத்தில் இரும்புக்கை மாயாவியின் பலத்தை பவானி கொடுத்திருந்தார் லோக்கி.

இவை அனைத்தும் காமிக்ஸை அடிப்படையாக கொண்டு தமிழில் வந்த திரைப்படங்களாக உள்ளன.

Refresh