Hollywood Cinema news
காட்ஸில்லாவை ஹீரோவாதான பாத்திருக்கீங்க!.. வில்லனா பார்த்ததில்லையே – காட்ஸில்லா மைனஸ் ஒன் விமர்சனம்!.
ஹாலிவுட் படங்களில் தற்சமயம் காட்ஸில்லா திரைப்படத்திற்கு அதிகப்படியான ரசிகர்கள் உண்டாகி இருப்பதை பார்க்க முடிகிறது. காட்ஸில்லாவை பொறுத்தவரை ஹாலிவுட்டில் அது மக்களை பாதுக்காக்க வரும் மிருகமாகதான் இருக்கும்.
இதுவரை காட்ஸில்லா தொடர்பாக ஹாலிவுட்டில் வந்த படங்கள் இப்படிதான் இருந்துள்ளன. ஆனால் காட்ஸில்லா கதையை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள்தான். ஹீரோஷிமா நாகசாகியை அழிக்க வீசப்பட்ட அணுக்குண்டின் கதிர்வீச்சால் மரபணு மாற்றப்படைந்து அசுர வளர்ச்சியடைந்த ஒரு பல்லிதான் காட்ஸில்லா.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான காட்ஸில்லா மைனஸ் ஒன் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் கதை:
படத்தின் கதை இரண்டாவது உலகப்போர் சமயத்தில் நடக்கிறது. கமிகாசே என்னும் தற்கொலை படையை சேர்ந்த சிகிசிமா என்கிற ஃபைட்டர் ஜெட் ஓட்டும் கதாநாயகனும் இன்னும் சிலரும் ஜெட்டை சரி செய்ய ஒரு தீவில் விமானத்தை இறக்குகின்றனர்,
இந்த நிலையில் தீவுக்குள் நுழைந்த குட்டி காட்ஸில்லா அங்கிருக்கும் அனைவரையும் கொன்றுவிடுகிறது. அதை கொல்வதற்கான வாய்ப்பிருந்தும் கதாநாயகன் சிகிசிமா பயத்தின் காரணமாக அதை கொல்லாமல் விட்டு விடுகிறான்.
இந்த நிலையில் அவன் திரும்ப டோக்கியோ வரும்போது அங்கே போரில் தன் பெற்றோர்கள் இறந்துள்ளதை அறிகிறான். பிறகு அங்கு அவனை போலவே அனாதையாக இருக்கும் ஒரு பெண் மற்றும் குழந்தையுடன் குடும்பமாக வாழ்ந்து வருகின்றான்.
ஆனாலும் தன்னால்தான் அந்த தீவில் வீரர்கள் இறந்தார்கள் என்கிற விஷயமே கதாநாயகனை தினமும் தூங்க விடாமல் செய்கிறது.
இந்நிலையில் ஒகாசாவாரா என்னும் தீவில் நடக்கும் அணு ஆயுத சோதனை காரணமாக அணுக்கதிரால் பாதிக்கப்படும் காட்ஸில்லா அணு ஆயுத சக்தியை வெளிப்படுத்தும் திறனை பெற்று வந்து டோக்கியோவில் தாக்குதல் நடத்துகிறது.
அதில் தன்னுடன் வாழ்ந்த வந்த பெண்ணை இழக்கும் கதாநாயகன் காட்ஸில்லாவை எப்படியாவது கொன்றே ஆக வேண்டும் என்று பழி தீர்க்க கிளம்புகிறான். அவன் எப்படி அதை பழி தீர்க்கிறான் என்பதே கதை. ஜப்பானில் கூட இப்படியான ஒரு சிறப்பான படத்தை கொடுக்க முடியும் என நிருபித்துள்ளது காட்ஸில்லா மைனஸ் ஒன்.
அடுத்த பாகத்திற்கு தொடர்பு வைத்து இந்த படம் முடிக்கப்பட்டுள்ளது.