பைக் டாக்ஸிகளுக்கு 10,000 அபராதம்..! ஆட்டோக்காரங்க மட்டும் என்ன நியாயமா இருக்கீங்களா?.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே பைக் டாக்ஸி என்கிற ஒரு முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது. பெரும்பாலும் சென்னை மாதிரியான பெருநகரங்களில் சென்னைக்கு புதிதாக வரும் நபர்களுக்கு சரியான இடத்திற்கு போவதற்கு வழி தெரியாது.
அப்பொழுது அவர்கள் ஆட்டோ அல்லது டாக்ஸி மாதிரியான வாகனங்களை பிடித்துதான் செல்வார்கள். ஆனால் ஒரு நபர் மட்டும் பயணம் செய்வதாக இருந்தாலும் நான்கு பேர் பயணித்தாலும் ஆட்டோவில் கட்டணம் ஒரே மாதிரி தான் இருக்கும்.
எனவே ஒரு நபர் பயணம் செய்வதற்காக பைக் டாக்சி என்கிற முறையை சில தனியார் நிறுவனங்கள் கொண்டு வந்தன. ராபிடோ மாதிரியான சில செயலிகளை பயன்படுத்தி பைக் டாக்ஸியை புக் செய்து சென்று கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது.
இது ஆட்டோ மாதிரியான வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. ஆனால் சென்னையில் உள்ள இளைஞர்கள் பலருக்குமே இது உதவியாக இருந்தது. ஒரு துணை வருமானமாக இந்த பைக் டேக்ஸி வருமானம் அவர்களுக்கு இருந்து வந்தது.
பைக் டாக்ஸியில் உள்ள பிரச்சனைகள்:
ஆனால் இந்திய மோட்டார் வாகன சட்டப்படி பணம் ஈட்டுவதற்காக வண்டி ஓட்டும் பொழுது வெள்ளை நம்பர் போர்டு கொண்ட சொந்த பயன்பாட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்கிற ஒரு விதிமுறை உண்டு. அந்த விதிமுறைப்படி பார்க்கும் பொழுது பைக் டேக்ஸி ஓட்டுவது வாகன சட்டத்திற்கு எதிரான ஒரு விஷயமாக இருக்கிறது.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும் பொழுது நாங்கள் எப்படி மக்களின் பயன்பாட்டுக்காக வேறு நிற போர்டு கொண்ட ஆட்டோக்களை வைத்திருக்கிறோமோ, அதே மாதிரி அவர்களையும் பைக் வைத்துக் கொண்டு ஓட்ட சொல்லுங்கள்.
அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று கூறுகின்றனர். எனவே இது குறித்து தற்சமயம் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி என்னதான் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வழியாக இருந்தாலும் வாகன சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பைக் டேக்ஸி ஓட்டக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் பைக் டாக்ஸி ஓட்டுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று கூறி இருக்கின்றனர் இது சென்னை மாதிரியான நகரங்களில் பைக் டாக்ஸி ஓட்டும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அவர்கள் கவலையில் இருக்கின்றனர்.
இதற்கு நடுவே கேரளா மாதிரியான மாநிலங்களில் இப்போதும் மீட்டர் வைத்து குறைந்த பணம்தான் ஆட்டோ காரர்கள் வசூல் செய்கிறார்கள். கேரளாவில் 30 ரூபாய்தான் குறைந்த கட்டணம். தமிழ்நாட்டில் குறைந்த பட்சமே 100 ரூபாய் வாங்குகின்றனர். கொஞ்ச தூரம் போவதற்கு கூட கொள்ளை காசு கேட்கின்றனர். அதுக்குறித்து மட்டும் அரசு வாய் திறக்கவில்லையே என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.