தமிழ் சினிமாவில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர்களில் மிக முக்கியமான நபர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் படங்களை பொருத்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக கதாநாயகனின் கதாபாத்திரம் இருப்பதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர் பார்த்து வியந்த படங்கள் குறித்து அடிக்கடி பேட்டிகளில் கூறுவது உண்டு. அப்படியாக இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான ஆண்பாவம் திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் விஜய் சேதுபதி கூறும் பொழுது ஆண்பாவம் திரைப்படத்தில் பெண்பார்க்கும் காட்சி ஒன்று வரும். அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி முதலில் நடிகர் பாண்டியன் அவரது உயரத்தை சுவற்றில் நின்று அளந்து விட்டு செல்வார்.
அதற்குப் பிறகு சீதா வந்து அளக்கும் பொழுது அவரது காலை எக்கி நிற்பது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டு இருக்கும். மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது என்பதை வசனத்தின் வழியாக சொல்லாமல் ஒரு காட்சியிலேயே காட்டிவிடுவார் பாண்டியராஜன். எப்படி அவ்வளவு எளிமையாக ஒரு காதலை அவரால் காட்ட முடிந்தது என்று அவரிடம் நான் பலமுறை கேட்டிருக்கிறேன் என்று அந்த காட்சி குறித்து பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.