சிறந்த திரைப்படம், சிறந்த பாடல்..! அடுத்தடுத்து அவார்டுகளை குவிக்கும் ஆர்.ஆர்.ஆர்!

பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தை கோல்டன் க்ளோப், ஆஸ்கர் உள்ளிட்ட புகழ்பெற்ற விருதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார் ராஜமௌலி.

ஹாலிவுட் விமர்சகர்கள் பலரும் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர். சமீபத்தில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்காக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்தது. இது இந்திய சினிமாவிற்கு கிடைத்த வெற்றி என ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

தற்போது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற க்ரிட்டிக் சாய்ஸ் அவார்ட்ஸ் (Critics Choice Awards) –ல் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் சிறந்த வெளிநாட்டு படத்திற்காகவும், சிறந்த பாடலுக்காகவும் விருதை வென்றுள்ளது. அடுத்தடுத்து பல விருதுகளையும் வென்று வரும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Refresh