Movie Reviews
வாரிசு திரைப்படம் எப்படி இருக்கு? – சுருக்கமான விமர்சனம்!
விஜய் ஒரு குடும்ப படத்தில் நடிக்கப்போகிறார் என்றதுமே பல வருடங்களுக்கு பிறகு விஜய் குடும்ப படத்தில் நடிக்கிறாரே? நல்ல படியாக வருமா? என்கிற கவலை பலருக்கும் இருந்தது. ஆனால் குடும்ப கதைக்குள்ளும் ஒரு பெரிய ஆக்ஷன் ப்ளாக்கை வைத்து ரசிகர்கள், குடும்ப ஆடியன்ஸ் இருவரையும் கவர் செய்ய முடியும் என காட்டியுள்ளார் வம்சி.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் கதாநாயகி, இயக்குனர், இசையமைப்பாளர் எல்லோருமே தெலுங்கில் புகழ்பெற்றவர்களாக இருப்பவர்களே இந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
படத்தின் கதை
ராஜேந்திரன் (சரத்குமார்) என்கிற தொழிலதிபருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர்தான் விஜய் ராஜேந்திரன் (விஜய்). இரண்டு பிள்ளைகள் தொழிலை பார்த்துக்கொள்ள விஜய் மட்டும் இந்தியா முழுவதும் சுற்றி புகைப்படம் எடுப்பதை தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வருகிறார். இதனால் வெகு காலமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார்.
எதிர்பாராத விதமாக அவர் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் விஜய் மீண்டும் தனது வீட்டிற்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ராஜேந்திரனின் எதிரி கம்பெனியால் தொடர்ந்து பல அடிகளை வாங்குகிறார் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் தளர்ந்து நிற்கும் நேரத்தில் களத்தில் இறங்குகிறார் அவரது மகன் விஜய் ராஜேந்திரன். பிறகு எதிரி நிறுவனத்திற்கு விஜய் ராஜேந்திரன் தொடர்ந்து கொடுக்கும் அடி, அதே சமயத்தில் தனது குடும்ப பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.
ஒன் லைன் ஸ்டோரியாக பார்க்கும்போது தாத்தா காலத்து கதையை படமாக்கியது போல தோன்றினாலும், வம்சியின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டி போட்டி பார்க்க வைத்துவிடுகிறது.
படத்தில் ஃபேமிலி செண்டி மெண்ட் மற்றும் ஆக்ஷன் இரண்டும் சமமான அளவில் உள்ளது. ஆனால் படத்தில் தேவையே இல்லாமல் கதாநாயகி கதாபாத்திரம் உள்ளது.
ராஷ்மிகா இல்லாமல் கூட படத்தின் கதை சிறப்பாகவே அமையும்படி உள்ளது. கதாநாயகி வைக்க வேண்டுமே என ராஷ்மிகாவை கதாநாயகியாக வைத்துள்ளனர்.
மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் போய் பார்க்க உகந்த படமாக வாரிசு உள்ளது.
