
சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் கன்னட திரைப்படங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வரப்படுகிறது. கே.ஜி.எஃப் திரைப்படம் வந்த நாள் முதலே கன்னட திரைப்படங்களும் சற்று மதிப்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியான விக்ராந்த் ரோனா என்கிற திரைப்படம் தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
பலரும் இந்த படத்தை பார்த்திருப்போம். இந்த படம் தற்சமயம் ஹாட்ஸ்டார் மற்றும் சீ 5 ஓ.டி.டி தளங்களில் கிடைக்கிறது. படத்தின் கதையே மிகவும் சுவாரஸ்யமானது. 1970 – 80 சமயங்களில் நடக்கும் கதையிது. அது ஒரு குக்கிராமம், அங்கு அடிக்கடி குழந்தைகள் காணாமல் போகின்றனர். பிறகு சில நாட்களுக்கு பிறகு அந்த குழந்தைகள் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்படுகின்றனர்.
இப்படியான கொடுஞ்செயல்களை அங்கு இருக்கும் ராட்சசன் ஒருவன் செய்கிறான் என அங்கிருக்கும் மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள போலீஸ் ஆபிசர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு கிராமத்திற்கு புது போலீஸ் வருகிறார். அவர்தான் கதையின் ஹீரோ விக்ராந்த் ரோனா.

விக்ராந்த் ரோனா இந்த மர்மங்களை கண்டறிவதே கதை. படம் முழுக்க முழுக்க காமிக் பாணியிலேயே இருந்தது. படத்தின் பல காட்சிகள் காமிக் புத்தகங்களில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டிருந்ததால் படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கிறது. 1980 காலக்கட்டத்தில் பாண்டம் என்கிற காமிக்ஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது. தமிழிலும் கூட முக மூடி வீரர் மாயாவி என்கிற பெயரில் இது வெளியாகி வந்தது.

இந்த நிலையில் பாண்டம் காமிக்ஸின் பல விஷயங்கள் விக்ராந்த் ரோனா திரைப்படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. விக்ராந்த் ரோனா தனது கையில் ஃபேண்டம் கதாபாத்திரம் அணிந்திருக்கும் மோதிரத்தை அணிந்திருப்பார். அதே போல படத்தின் முக்கியமான கட்டத்தில் குற்றவாளியை கண்டறிய அவருக்கு பாண்டம் காமிக்ஸ் உதவும்.
இதன் மூலம் இந்த படத்தின் இயக்குனர் அனுப் பந்தாரி ஒரு காமிக்ஸ் விரும்பி என்பது தெரிகிறது. இந்த படம் காமிக்ஸ் பாணியில் எடுத்ததால் வழக்கமான திரைப்படங்களில் இருந்து சற்று மாற்றமாக தெரிகிறது.