ஒரு ஷூவுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா? – அமேசான் ப்ரைமில் வெளிவந்த சிறப்பான திரைப்படம்!..
திரைப்படங்கள் வெறுமனே மக்களுக்கு கேளிக்கையாக மட்டும் இல்லாமல் பல விஷயங்கள் குறித்து நம்மிடம் விவாதத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. அப்படி ஒரு சிறப்பான கதை களத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை திரைப்படமாக்கியுள்ளனர்.
ஏர் (Air) என்கிற இந்த திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைமில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ளது. ஒரு நிறுவனத்தை நடத்துவதில் உள்ள சிக்கல்களை மிகவும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளார் இந்த படத்தின் இயக்குனரான பென் அஃப்லெக்.

நைக் என்கிற காலணி நிறுவனம் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் நடந்த உண்மை விஷயத்தை கொண்டே ஏர் படத்திக் கதைகளம் அமைந்துள்ளது.
நம்மூரில் கிரிக்கெட் முக்கிய விளையாட்டாக இருப்பது போல அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டாக கூடைப்பந்து இருந்துள்ளது. 1984 காலக்கட்டத்தில் கூடைபந்து விளையாட்டு தொய்வை கண்டு வந்தது. இந்த நிலையில் கூடைப்பந்து ஷூக்களை வாங்குவதில் மக்களும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
எனவே கூடைப்பந்துக்கான ஷூக்களை போடுவதை நிறுத்திவிடலாம் என முடிவெடுத்தது நைக் நிறுவனம். மேலும் அப்போது வந்த ஆடிடாஸ் நிறுவனம் நைக் நிறுவனத்தை விட பலம் வாய்ந்த நிறுவனமாக இருந்தது. பிரபல கூடைப்பந்து வீரர்களை வைத்து சிறப்பாக விளம்பரம் செய்ததால் ஆடிடாஸ் நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருந்தது.

நைக் நிறுவனத்திடம் பெரிதாக காசு இல்லாததால் அவர்களால் பெரிய கூடைப்பந்து வீரர்களை வைத்து விளம்பரம் செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில்தான் கூடைப்பந்து வீரர் ஜோர்டன் கதைக்குள் வருகிறார். ஜோர்டன் அப்போதுதான் வளர்ந்து வரும் வீரராக இருக்கிறார். அதனால் எந்த நிறுவனமும் அவரை கண்டுக்கொள்ளவில்லை.
ஆனால் ஜோர்டான் ஒரு பெரும் விளையாட்டு வீரராக வருவார் என்பதை அப்போதே கணிக்கிறார் நைக் நிறுவனத்தை சேர்ந்த சன்னி வக்காரோ. இதற்காக அவர் ஜோர்டானிடம் பேசுகிறார். பிறகு ஜோர்டானின் பெயரிலேயே ஏர் ஜோர்டான் என்கிற ஷூவை வெளியிடுகிறது நைக் நிறுவனம்.
அந்த ஷூ நைக் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் ஏர் என்கிற இந்த திரைப்படம்.