ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே தற்சமயம் வெளியாகியுள்ளது புஷ்பா 2 திரைப்படம். அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே புஷ்பா 2 வில் வெளியான பீலிங் மாதிரியான பாடல்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் படம் எப்படி இருக்கு என பார்க்கலாம்.
படத்தின் கதை:
முதல் பாகத்தில் கடத்தல் கும்பல் மத்தியில் புஷ்பா பெரும் இடத்தை வகிப்பதோடு கதை முடிந்தது. இந்த படத்தில் கடத்தல் கூட்டத்தின் முக்கிய அங்கமாக மாறுகிறார் புஷ்பா. அப்போது முதலமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
அப்போது புஷ்பாவை சந்திக்கும் முதல்வர் அவனோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கிழித்து எறிகிறார். ஒரு கடத்தல்க்காரனோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாது என அவர் கூறுகிறார்.
பொதுவாகவே புஷ்பாவை யாராவது அவமானப்படுத்திவிட்டால் அது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிடும். எனவே முதலமைச்சர் ஆவதற்கு திட்டமிடுகிறான் புஷ்பா. அந்த வகையில் அதற்காக புஷ்பா செய்யும் விஷயங்கள்தான் கதையாக உள்ளது.
இதற்கு நடுவே புஷ்பாவுக்கு எதிராக வில்லனான போலீஸ் அதிகாரி என்ன செய்கிறார் என்பதும் ஒரு பக்கம் செல்கிறது.
நிறைகள்:
படத்தில் ஒளிப்பதிவு வேலைகள், பாடல்கள், பின்னணி இசை எல்லாம் சிறப்பாக இருக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசை சாம் சி.எஸ் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு முக்கிய தூணாக செயல்பட்டுள்ளன. தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களும் சிறப்பாக இருக்கின்றன.
குறைகள்:
புஷ்பா முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. அவை எல்லாம் பாலகிருஷ்ணா படங்களில் வரும் சண்டை காட்சிகளை மிஞ்சுவதாக இருக்கின்றன. ஒரு காட்சியில் கதாநாயகன் கை கால் இரண்டிலும் கயிற்றால் கட்டப்பட்டும் சண்டையிடுவது பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது.
காந்தாரா படத்தை பின்பற்றி இதில் புஷ்பாவுக்கு சாமி வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவை அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
படம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் இருந்தாலும் அந்த அளவிற்கு கதை என்று எதுவும் இல்லை. சொல்லப்போனால் புஷ்பா 1 கொடுத்த அளவிற்கு கூட புஷ்பா 2 எண்டர்டெயின்மெண்டாக இல்லை.