Cinema History
நீங்க சாவணும் சார்..! அப்பதான் இந்த படம் ஓடும் – எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்.
ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் பெரும் கமர்ஷியல் கதாநாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் மீது தமிழக மக்களுக்கு அதிகப்படியான அன்பு இருந்தது.

எம்.ஜி.ஆரை திரைப்படத்தில் எந்த நடிகாராவது தாக்குவது போல காட்சி இருந்தால் அதை உண்மை என கருதி நிஜத்தில் போய் அந்த வில்லனிடம் வம்பு செய்வார்கள் நம் மக்கள். இதனால் எப்போதும் எம்.ஜி.ஆர் ஜெயிப்பது போன்ற படங்களையே மக்கள் விரும்பினர்.
சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேஷங்களை போட்டு வித்தியாசமான கதைகளில் நடித்தார். பல படங்களில் சிவாஜி இறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. அதை மக்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் எம்.ஜி.ஆர் இறப்பது போல திரையில் வருவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அப்படியான கதைகளில் எம்.ஜி.ஆர் நடிப்பதை தவிர்த்தார்.
இந்த நிலையில்தான் 1955 ஆம் ஆண்டு இயக்குனர் யோகானந்த் மதுரை வீரன் என்னும் நாட்டார் தெய்வத்தின் கதையை திரைப்படமாக இயக்கலாம் என்கிற முடிவிற்கு வந்தார். அதற்கு எம்.ஜி.ஆர் சரியாக இருப்பார் என அவர் கருதினார். எனவே இந்த கதையை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். அந்த கதைப்படி படத்தின் இறுதியில் கதாநாயகன் இறந்துவிடுவார்.
அதை கேட்ட எம்.ஜி.ஆர் “சார் நான் இறந்தால் அந்த படம் ஓடாது. மக்கள் பார்க்க மாட்டார்கள்” என கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் “இல்ல சார் இந்த படம் நீங்க செத்தாதான் ஓடும்” என கூறியுள்ளார்.
அதை போலவே எடுக்கப்பட்டு ஒரு நல்ல ஹிட் கொடுத்த படமாக மதுரை வீரன் திரைப்படம் அமைந்தது.
