தமிழ் இசையமைப்பாளர்களில் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன.
இதனாலேயே இளையராஜா இசையமைப்பது என்பது திரைப்படங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான விஷயமாக பார்க்கப்பட்டது. பல முன்னணி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் வீட்டை நாடினர். இந்த நிலையில் இளையராஜாவிற்கும் வேலைபளு அதிகரித்தது.
வரிசையாக வாய்ப்பு:
நிறைய திரைப்படங்களுக்கு வரிசையாக அவர் இசையமைத்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இயக்குனர் நந்தகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
செந்தமிழ்பாட்டு என்கிற திரைப்படத்தில் நான் பணிப்புரிந்து கொண்டிருந்தப்போது அந்த திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் படம் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த விஷயத்தை அறிந்த இளையராஜா தேவர் மகன் திரைப்படத்திற்கு இசையமைக்க சென்றுவிட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் செந்தமிழ்பாட்டு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டனர். எனவே ரீ ரெக்கார்டிங்கிற்காக இளையராஜாவை நாடியப்போது அவர் ஏற்கனவே தேவர் மகன் பட வேலையை துவங்கியிருந்தார்.
இரண்டு படம்:
அதே சமயம் இவர்களையும் அப்படியே அனுப்ப முடியாது என யோசித்த இளையராஜா பிரசாத் லேபில் எங்கள் படத்திற்கும், ஏ.வி.எம் மில் தேவர் மகன் படத்திற்கும் மாறி மாறி ரீ ரெக்கார்டிங் வேலைகளை பார்த்தார். இளையராஜாவை தவிர வேறு யாராலும் அதை செய்ய முடியாது.
இத்தனைக்கும் இரண்டு படத்திற்கும் வேறு வேறு மாதிரியான இசையை கொடுத்திருந்தார் இளையராஜா என்று அந்த விஷயத்தை விளக்கியுள்ளார் நந்தக்குமார்.