Ilayaraja : தமிழ்நாட்டில் உள்ள பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. எம்.எஸ்.விக்கு பிறகு ஒரு பெரும் ரசிக பட்டாளத்தை கொண்ட இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார். அப்போதெல்லாம் இளையராஜாவின் இசைக்காகவே பல படங்கள் ஓடின.
இந்த சமயத்தில்தான் இயக்குனர் ஆர்.கே செல்வமணி தனது முதல் படமான புலன் விசாரணை திரைப்படத்தை இயக்க துவங்கினார். இந்த திரைப்படத்தை விஜயகாந்தின் ராவத்தர் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. பொதுவாகவே ராவத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைப்பார்.

எனவே புலன் விசாரணை திரைப்படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். புலன் விசாரணை திரைப்படம் ஆக்ஷன் திரைப்படம் என்பதால் அதில் பெரிதாக பாடல்கள் இல்லை. மொத்தமே 2 பாடல்கள்தான் இருந்தன. 2 பாடல்களுக்கு எல்லாம் இசையமைக்க முடியாது என முதலில் இளையராஜா மறுத்தாலும் விஜயகாந்த் படம் என்பதால் அந்த பாடல்களை போட்டு கொடுத்தார்.
அதற்கு பிறகு ஆர்.கே செல்வமணி இயக்கிய மற்றொரு திரைப்படம் கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படத்திலும் மொத்தம் இரண்டு பாடல்கள்தான் இருந்தன. அதிலும் ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு இளையராஜா முதலில் அமைத்த இசை பிடிக்கவில்லை என கூறி அதை மாற்றி வேறு வாங்கினார் ஆர்.கே செல்வமணி.

இதனால் கடுப்பான இளையராஜா, ஐந்து பாட்டு போட்டுவிட்டு அதில் ஏதாவது குறை சொன்னால் தேவலை. போட்டதே ரெண்டு பாட்டு அதில் குறை வேறா என சத்தம் போட்டுள்ளார். மேலும் இனி இரண்டு பாடல் என்றால் எங்கிட்ட வரவேண்டாம் என கூறி அனுப்பினார்.
அதற்கு அடுத்து ஆர்.கே செல்வமணி இயக்கிய திரைப்படம் செம்பருத்தி. இது குடும்ப படம் என்பதால் இளையராஜாவை பழிவாங்குவதற்காகவே அதில் 11 பாடல்களை வைத்தார் ஆர்.கே செல்வமணி. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் ஆச்சரியப்பட்டு போனார் இளையராஜா. எல்லாத்துக்கும் சேர்ந்து இதில் பாட்டு வச்சிட்டியா என கேட்டிருக்கிறார்.
இதனை ஆர்.கே செல்வமணி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.






