News
நான் வந்தா உங்களுக்கு நிறைய ’மசாலா’ கிடைக்கும்! – கங்கனா ரனாவத் சூசகம்!
பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ள கங்கனா ரனாவத் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்துள்ளார். பிரபலமான நடிகையாக இருந்தபோதும் தனது அரசியல் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி வந்தவர் கங்கனா ரனாவத்.
இவரது பதிவுகள் மீது நடவடிக்கை எடுத்த ட்விட்டர் வலைதளம் இவரது கணக்கை நீக்கியது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத், தான் பிறந்த மாநிலமான இமாச்சல பிரதேசம் குறித்து பேசினார். பாஜக வாய்ப்பளித்தால் இமாச்சல பிரதேசத்தில் தான் பிறந்த மணாலி தொகுதியில் போட்டியிட்டு வென்று அம்மக்களுக்கு நன்மை செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் சமூக வலைதளம் குறித்து பேசியவர், தான் மீண்டும் ட்விட்டருக்கு வந்தால் மக்களின் வாழ்க்கை பரபரப்பாகிவிடும், ஆனால் என் நிலைமை பிரச்சினையாகிவிடும் என்றும், தான் ட்விட்டருக்கு வந்தால் எல்லாருக்கும் நல்ல மசாலா கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
சமீப காலமாக கங்கனா ரனாவத் நடித்த படங்கள் தோல்வியை தழுவியதால் அவர் அரசியல் பக்கம் திரும்ப முடிவு எடுத்திருக்கலாம் என பாலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
