ஜெயிலர் கதைய முதல்ல லோகேஷ்கிட்ட சொன்னேன்! அப்புறம்தான் விக்ரம் வந்துச்சு! – நெல்சன் ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் ஹிட் குடுத்து பட்டையை கிளப்பி வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் நெல்சன் உள்ளார். விஜய் நடிப்பில் இவர் இயக்கிய ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும், இவர் இயக்கி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெறும் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் அந்த வெற்றியையும் அவர் கொண்டாட முடியாதபடி இணையவாசிகள் சிலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் கதை கமல்ஹாசன் நடித்து முன்னதாக வெளியான ‘விக்ரம்’ படத்தின் சாயலில் இருப்பதாகவும், விக்ரமையே பட்டி டிங்கரிங் செய்து நெல்சன் படம் எடுத்துள்ளதாகவும் சிலர் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு தகவலை நெல்சன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். பீஸ்ட் படத்திற்கான வேலைகள் தொடங்கி நடந்துக் கொண்டிருக்கும்போதே நெல்சன் அடுத்த படத்தில் ரஜினியை இயக்குகிறார் என முடிவாகிவிட்டது.
அப்போதே சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ரஜினிகாந்த் ஆகியோரிடம் நெல்சன் ஜெயிலர் கதையை சொல்ல அனைவருக்கும் அது பிடித்துவிட்டது. அது விக்ரம் படம் வெளியாவதற்கு 6 மாதங்கள் முன்பே நடந்துள்ளது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜை சந்தித்த நெல்சன் தனது கதையை லோகேஷிடமும் சொல்லியுள்ளார்.
விக்ரமும் இதே போன்ற ஒரு தொடக்கத்தை கொண்டிருந்தாலும் இரண்டுமே வேறு வேறு மாதிரியான கதைகள் என்று இருவருமே பேசிக் கொண்டதாக நெல்சன் கூறியுள்ளார். இதனால் விக்ரம் படமே ரிலீஸாகாத போது எப்படி நெல்சன் விக்ரமை காப்பியடித்து ஒரு படம் செய்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்த இளம் இயக்குனர்கள் என்பதால் கதையில் சில விஷயங்கள் ஒரே வேவ் லென்த்தில் அமைந்து விடுவது இயற்கைதான் என கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.