தொடர்ந்து கணினி தொடர்பான ஹார்ட் டிஸ்க், ரேம் மாதிரியான பொருட்களின் விலை எக்கச்சக்கமாக எகிறி வருகிறது, 4000 ரூபாய்க்கு விற்ற ரேமின் விலை இப்போது 14000மாக உள்ளது. அதே போல மொபைல் போனின் விலையும் அதிகரித்துள்ளது.
காரணம் ஏ.ஐக்காக அமைக்கப்படும் டேட்டா செண்டர். ஏ.ஐ டேட்டா செண்டர்களுக்கு அதிக அளவில் Storage மற்றும் Ram சிப்கள் தேவைப்படுகின்றன. உலக அளவில் Micron Technology, Samsung Electronics, SK Hynix ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இதற்கான சிப்களை அதிகமாக தயாரித்து வந்தன.
ஆனால் ஏ.ஐ டேட்டா செண்டர்கள் வைக்கும் நிறுவனங்கள் வணிக ரீதியாக மக்களிடம் விற்பனை செய்வதை விட 300 முதல் 500 சதவீதம் வரை அதிகமாக விலை கொடுத்து இந்த சிப்களை வாங்க தயாராக இருப்பதால் மக்களுக்கான சப்ளையை மொத்தமாக குறைத்து முழுவதுமாக டேட்டா செண்டர்களுக்கான மெமரி சிப் தயாரிப்புகளில் இந்த நிறுவனங்கள் இறங்கிவிட்டன.

இதனால் மொபைல் நிறுவனங்கள், கணினி உதிரிபாக நிறுவனங்கள் மெமரி சிப் தட்டுப்பாட்டால் அதன் விலையை அதிகரித்துள்ளன. அதிகமான தேவை இருக்கிறது என்றால் அதிகமாக தயாரிக்கலாமே என்பது பலரது கேள்வியாக இருக்கும்.
ஆனால் ஒரு சிப் தயாரிப்பு ஆலையை நிறுவ 3 முதல் 5 ஆண்டுகள் தேவைப்படும். திடீரென ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்பட்ட அசுரத் தேவையால், தற்போதைய தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனைத் தாண்டியே ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால்தான் இப்போது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த டிமாண்ட் காரணமாக மெமரி சிப்க்காக சீனாவை மட்டுமே நம்பியிருந்த உலக நாடுகள் இப்போது தங்கள் நாட்டுக்கென தனி சிப் தயாரிப்பு ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் ஆட்டத்தில் இறங்கியுள்ளது.

குஜராத் மற்றும் அசாமில் 1,20,000 கோடி பட்ஜெட்டில் டாடா செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவுவதற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. Taiwan’s Powerchip Semiconductor Manufacturing Corporation, intel, Qualcomm ஆகிய நிறுவனங்களுடன் டை அப் செய்து இந்த ஆலையை டாடா நிறுவுகிறது. இந்தியாவுக்கு தேவையான எலக்ட்ரானிக் சிப்கள மலிவு விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
மேலும் ஹெர்குலிஸ் சைக்கிள்களில் துவங்கி பல தொழில்களை செய்து வரும் முருகப்பா குழுமமும் CG Semi என்கிற சிப் அசெம்பிள் ஆலையை நிறுவ உள்ளது. இந்த ஆலைகளை கட்டி முடித்து தயாரிப்பு வேலைகளை துவங்க 2 வருடங்களாவது ஆகும் என கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுமே தீவிரமாக இதை சரி செய்ய போராடி வருகின்றன.
எனவே 2027 அல்லது 2028 இறுதியில் ஸ்மார்ட் போன் மற்றும் கணினி உதிரிபாகங்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. எவ்வளவு குறையும் என்றால் இதற்கு முன்பு விற்பனையான விலையை விடவே குறைவான விலைக்கு விற்பனை ஆகும் என கூறப்படுகிறது.




