Actor Vijay : சினிமாவை பொறுத்தவரை பெரும் கதாநாயகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பெரிய ஹீரோக்களிடம் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
அதற்கு பல விஷயங்களை அவர்கள் செய்ய வேண்டி இருக்கிறது தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே எடுத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் காஜாமைதீன். காஜாமைதீன் அஜித்தை வைத்து ஜனா திரைப்படமும் பிறகு தனுஷின் நடிப்பில் தேவதையை கண்டேன் திரைப்படத்தையும் தயாரித்தார்.
பொதுவாக அந்த சமயத்தில் தயாரிப்பாளர்கள் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் தயாரித்தால் பிறகு விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் தயாரிப்பது உண்டு. அந்த வகையில் காஜா மைதீனும் அடுத்த திரைப்படத்தை விஜய்யை வைத்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அதற்காக விஜய்யை சென்று சந்தித்தார்.

அப்போதைய சமயத்தில் விஜய்க்கு படங்களை தேர்வு செய்யும் வேலையை அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் செய்து வந்தார். அவரிடம்தான் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கதையை சொல்ல வேண்டும். கதைப் பிடித்திருந்தால் அவர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். இந்த நிலையில் ஷாருக்கான் நடித்து பெரும் ஹிட் கொடுத்த தில்தோ பாகல் ஹே என்கிற திரைப்படத்தை தமிழில் விஜய்யை வைத்து எடுக்கலாம் என்பது எஸ்.ஏ சந்திரசேகரின் யோசனையாக இருந்தது.
நான்கு தயாரிப்பாளர்கள் அப்போது விஜய் படத்திற்கு வாய்ப்பு தேடி வந்திருந்தனர். அவர்கள் நான்கு பேரிடமும் யார் அந்த ஷாருக்கான் திரைப்படத்திற்கு காப்புரிமை வாங்கி வருகிறீர்களோ அவர்களுக்கு விஜய்யை வைத்து படம் தயாரிப்பதற்கான வாய்ப்பைத் தருகிறேன் என்று கூறிவிட்டார் எஸ் ஏ சந்திரசேகர்.

உடனே மிக கஷ்டப்பட்டு அந்த படத்தின் தமிழுக்கான உரிமையை வாங்கிக் கொண்டு காஜாமைதீன் சந்திரசேகரை சந்தித்து படப்பிடிப்பையும் துவங்கினார். ஆனால் அந்த படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் அதற்கு சரியான கதாநாயகிகள் அமையாமல் அந்த திரைப்படம் கடைசி வரை எடுக்கப்படாமல் போய்விட்டது.