நான் நடிக்கும் காட்சிகளுக்கு நான்தான் இயக்குனர்!.. படத்தில் எம்.ஜி.ஆர் போட்ட விதிமுறை!..

தமிழில் நாட்டுக்கு நல்லது செய்வது போன்ற திரைப்படங்களையும் நல்ல நல்ல கருத்துக்களை கூறும் திரைப்படங்களையும் நடித்து வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களான கூலித் தொழிலாளி மற்றும் சமூக அவலங்களை தட்டி கேட்பவர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்ததால் அவருக்கு பாமர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

பிறகு அரசியலில் அவர் வளர்வதற்கும் இந்த பிம்பம் உதவியாக இருந்தது. இதனால் எம்ஜிஆர் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே பல விஷயங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பார். அவரது படங்களில் மூடநம்பிக்கை தொடர்பான எந்த விஷயமும் இருக்கக் கூடாது என்று நினைப்பார்.

Social Media Bar

அதேபோல பாடல்களில் மக்களுக்கு கருத்தை சொல்லும் நல்ல பாடல் வரிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இதனால் எம்.ஜி.ஆர் ஓ.கே சொன்ன பிறகுதான் ஒவ்வொரு பாடல் வரிகளும் பாடலாக மாறும். இந்த நிலையில் இயக்குனர் சி.பி ஜம்புலிங்கம் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க நினைத்தார் .

ஏற்கனவே தெலுங்கில் வந்த ஒரு படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று அவர் நினைத்தார். எனவே அந்த படத்தை எம்.ஜி.ஆரிடம் போட்டு காண்பித்தார். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கும் அந்த படம் தகுந்த படமாக இருந்ததால் அதை நடிக்கலாம் என்ற முடிவு செய்தார் எம்ஜிஆர்.

இந்த நிலையில் நம் நாடு என்கிற அந்த திரைப்படத்தை சிபி ஜம்புலிங்கம் இயக்க துவங்கினார். ஆனால் அதில் எம்ஜிஆர் ஒரு விதிமுறை வைத்திருந்தார். அதில் எம்.ஜி.ஆர் வரும் காட்சிகள் அனைத்தையும் எம்ஜிஆர்தான் இயக்குவார் மற்ற காட்சிகளை மட்டும் சி.பி ஜம்புலிங்கம் இயக்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

சி.பி ஜம்புலிங்கமும் அதற்கு ஒப்புக்கொள்ள நம் நாடு திரைப்படம் தயாரானது அதில் சிபி ஜம்புலிங்கம் மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் இணைந்து சிறப்பாக அந்த திரைப்படத்தை இயக்கி இருப்பார்கள்.