News
அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டு.. வராம இருக்க மாட்டேன்! – யாரை சீண்டுகிறார் விஷால்?

தற்போது தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் ஹாட் டாப்பிக் என்றால் அது நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரிதான். பல ஆண்டுகளாக இதற்காக மெல்ல காய் நகர்த்தி வந்தவர், உள்ளாட்சி தேர்தல்களில் தனது ஆதரவுடன் களமிறங்கிய இளைஞர்களின் வெற்றியை தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் அரசியல் கட்சியை அறிவித்து விட்டார்.
ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடிகர் விஷாலின் அறிவிப்புதான். எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றோர் முன்னர் நடிகர் சங்க தலைவர்களாக பொறுப்பு வகித்து பின்னர் அரசியலில் சோபித்த நிலையில் அந்த வரிசையில் தனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என விஷால் நினைத்திருக்கலாம் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.
தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் அளவு பெரிய அளவிலான செயல்பாடுகளில் விஷாலின் நற்பணி மன்றம் இல்லாவிட்டாலும், அன்னதானம், இரத்த தான முகாம் என்று களப்பணிகளில் ஓரளவு ஈடுபட்டே வருகின்றனர். அதேசமயம் நடிகர் விஷால் அந்த காலக்கட்டத்தை பொறுத்து, இயற்கையின் முடிவால் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டால் வருவேன் என்றே தெரிவித்துள்ளார். அதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது அரசியல் எண்ட்ரிக்காக தொடர்ந்து களப்பணியாற்றுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனல் அரசியலுக்கு வருவேன் என அவர் திடமாக சொல்லவில்லை.
இதுபற்றி சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது “அரசியல் என்பது சினிமா போல ஒரு துறை கிடையாது. அது ஒரு பொதுசேவை. பொழுதுபோக்காக வந்து செல்லும் இடம் கிடையாது. நான் அரசியலுக்கு வருவதையோ, வரவில்லை என்பதையோ மறைப்பதற்கு எதுவுமில்லை. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்க மாட்டேன். அந்த நேரத்தில் என்ன தேவையோ அதற்கு ஏற்ப முடிவு எடுப்பேன்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன், வெற்றி பெறுவேன் என்றெல்லாம் நான் யோசித்ததே இல்லை. ஆனால் அந்த காலக்கட்டத்தில் இயற்கையாக அது நடந்தது. அரசியலும் அப்படியாக சரியான நேரத்தில் சரியான பதில் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்க மாட்டேன் என அவர் பேசியுள்ளது மறைமுகமாக யாரையும் குறிப்பிட்டு பேசியுள்ளதா என்ற சந்தேகமும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
