Actor Soorie: தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் போராடி ஒரு வழியாக ஒரு நகைச்சுவை காமெடியின் வழியாக காமெடியனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூரி. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்த சூரிக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகுநாட்களாகவே இருந்தது.
இந்த நிலையில் வெற்றிமாறன் மூலம் சிறப்பான ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சூரி. விடுதலை என்கிற அந்த முதல் படமே அவருக்கு அமோகமான வரவேற்பை பெற்று தந்தது. மக்கள் மத்தியிலும் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் நடிகர் சூரியை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் சூரி. அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அதே போல கொட்டுக்காளி என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த மூன்று திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் இருந்து வேறுபட்ட கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாகும். எனவே மூன்று படங்களும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகின்றன. இதனால் நடிகரின் சூரியின் புகழ் உலக அளவில் தற்சமயம் பரவியுள்ளது.
தற்சமயம் வளர்ந்து வரும் சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக சூரி இருக்கிறார். அவர் நடித்த விடுதலை படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சூரி. தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் சூரிக்கு மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
பலரும் அந்த சமயத்தில்தான் சூரி சினிமாவிற்கு வந்தார் என நினைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு முன்பிருந்தே சூரி சினிமாவில் இருந்து வருகிறார். அதற்கு முன்பே பல வருடங்களாக சினிமாவில் முயற்சித்து வந்தார் சூரி.
2000 ஆம் ஆண்டு கார்த்தி நடித்து கண்ணன் வருவான் என்கிற திரைப்படம் வெளியானது அதில் ஒரு சின்ன காட்சியில் நடிகர் சூரி நடித்திருப்பார். அதுதான் அவரது முதல் படம் என கூறலாம். அதன் பிறகு அஜித் நடித்த ஜீ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சூரி.
அதன் பின்பு காதல் திரைப்படத்தில்தான் அவர் முகத்திற்கு க்ளோஸ் அப் வைத்து காட்சிகள் இருக்கும். சென்னைக்கு காதலனுடன் ஓடி வரும் சந்தியா பாத்ரூமில் குளித்துவிட்டு சென்றபிறகு அங்கு குளிக்க வரும் சூரி அங்கிருக்கும் பொட்டை அதிர்ச்சியாக பார்ப்பது போல அந்த காட்சி அமைந்திருக்கும்.
2007 இல் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த தீபாவளி படத்தில் ஓரளவு முகம் தெரியும் அளவில் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. இதற்கெல்லாம் பிறகுதான் 2009 இல் வெண்ணிலா கபடி குழுவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் சூரி.
வெண்ணிலா கபடி குழுவில் முகம் தெரிகிற அளவிற்கு வருவதற்கே கிட்டத்தட்ட 9 வருடம் போராடியுள்ளார் நடிகர் சூரி. கிட்டத்தட்ட 23 வருடங்களாக தமிழ் சினிமாவில் சூரி பயணித்து தற்சமயம் கதாநாயகனாகி உள்ளார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips