நெருப்பில் சிக்கி விபத்துக்குள்ளான நடிகர்!.. ஓடி சென்று உதவிய எம்.ஜி.ஆர்!.
சினிமாவில் மக்கள் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி திரையுலகில் உள்ளவர்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அதனாலேயே அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு சீக்கிரமாகவே அங்கீகாரம் கிடைத்துவிட்டது.
இந்த நிலையில் திரைப்படங்களில் கூட எம்.ஜி.ஆர் சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் திரைப்படங்களிலேயே நடித்து வந்தார். மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளை அறவே ஒதுக்கி வந்தார் எம்.ஜி.ஆர்.
நிறைய நபர்களுக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்திருந்தாலும் இப்போது உள்ளது போல அப்போது சமூக ஊடகங்கள் அவ்வளவாக இல்லாத காரணத்தால் எம்.ஜி.ஆர் செய்த நன்மைகள் அவ்வளவாக வெளியே தெரியவில்லை என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு.

எம்.ஜி.ஆரிடம் வெகுநாட்களாக பழக்கத்தில் இருந்து வந்தவர் நடிகர் சசி. ஒருமுறை இவருக்கு உடலில் நெருப்பு காயம் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு சென்றார். அவரது மனைவிக்கும் நெருப்பால் விபத்து ஏற்பட்டிருந்தது. அவர்களது தோல் எல்லாம் நெருப்பில் கருகி இருந்ததால் 24 மணிநேரமும் ஏ.சியில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.
ஆனால் அப்போது ஏ.சி வாங்கும் அளவிற்கு அவரிடம் காசு இல்லை. இந்த விஷயம் எம்.ஜி.ஆரின் காதுக்கு வந்துள்ளது. நிலவரத்தை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் உடனே ஆட்களை தயார் செய்து சசியின் வீட்டில் ஏ.சியை மாட்டியுள்ளார்.