2 நொடியில் ஒரு படம் ஏறிடும்… 10ஜி இண்டர்நெட்டை அறிமுகப்படுத்திய சீனா.!
உணவு, உடை, இருப்பிடம் மாதிரியே இப்போது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக இணையமும் மாறி இருக்கிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியது முதலே அது தொடர்பான தொழில்நுட்பமும் வளர்ச்சியடைய துவங்கிவிட்டது.
கடந்த 10 வருட காலத்தில் மட்டும் இணைய தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தற்சமயம் அதிவேக இணையமாக உலகம் முழுக்க 5ஜி இணைய சேவை இருந்து வருகிறது. மொபைல் போன்களும் அந்த தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல வர துவங்கிவிட்டன.
இந்த நிலையில் அனைத்து நாடுகளும் 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சீனா 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 10ஜி என்பது மிக அதிக இணைய வேகத்தை கொண்ட இணைய வசதி ஆகும். இதற்காக PON Passive optical Network என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர் சீனர்கள்.
இதன் மூலம் மூன்று நொடிகளில் 9834 எம்.பி (9 GB) பதிவிறக்கம் வேகமும் 1008 பதிவேற்றம் வேகமும் கிடைக்கிறதாம். உலக நாடுகளுக்கே இது பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பெரிய பெரிய ஃபைல்களை கூட கண் இமைக்கும் நேரத்தில் இதனால் பதிவிறக்க முடியும்.
இப்போதுதான் 2030க்குள் இந்திய அரசு 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம் என கூறியிருந்தது. பாரத் 6ஜி விஷன் என இதற்கு பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீனாவின் இந்த முன்னெடுப்பு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.