மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்றால் நடிகர், அரசியல்வாதி, முதலமைச்சர் எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல் முடிந்தவரை உதவிகளை மற்றவர்களுக்கு செய்வார் என்றுதான் பலரும் அறிவார்கள்.
ஆனால் அவர் தனது வாழ்க்கையில் வறுமையின் உச்சத்தை பார்த்தவர் பசி பட்டினியுடன் பல நாட்கள் ஓட்டியவர். சினிமாவில் நுழைந்து பத்து வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்தான் நடித்தார் ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கி அதன் பின்பு நாடோடி மன்னன் அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களின் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
அப்படியே அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழகத்தின் முதல் அமைச்சராகவும் மாறினார். சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வறுமையில் இருந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு நாயர் என்கின்ற ஒரு நண்பர் இருந்தார். ஒரு ஜப்பானியர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் கஷ்டப்படும் நேரத்தில் ஒரு நாயர் ஐந்து ரூபாயை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து உதவினார்
ஆனால் அதை எம்.ஜி.ஆர் வாங்க மறுத்தார். அதற்கு நாயர் ராமச்சந்திரா நீ கஷ்டத்தில் இருப்பது எனக்கு தெரியும் இதை கடனாக வைத்துக்கொள் என சொல்லவே எம்.ஜி.ஆர் அதை வாங்கிக் கொண்டார். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்து வந்த சமயத்தில் நாயரிடம் அந்த ஐந்து ரூபாயை திருப்பிக் கொடுக்க எம்.ஜி.ஆர் நினைத்தார்.
ஆனால் அந்த ஜப்பானிய குடும்பத்தோடு அவர் ஜப்பானுக்கு சென்று விட்டதாக தெரியவந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுப்பதற்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஜப்பான் சென்ற பொழுது அங்கு தனது பழைய நண்பர் நாயர் எம்.ஜி.ஆரை தேடி வந்துள்ளார்.
உங்களுடைய சூட்டிங் நடப்பதாக கேள்விப்பட்டு உங்களை பார்க்க வந்தேன் என்று அவர் கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் திலகம் கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த கதையாக அவரை வாரி அணைத்துக்கொண்டார். நான் கஷ்டப்படும் சமயத்தில் நீங்கள் ஐந்து ரூபாய் கொடுத்து உதவினீர்கள் இன்று நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் அவரை தனது திரைப்பட தொழிலாளர்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டார்.
இவரைப் பற்றி புகழ்ந்து பேசினார். அவரோடு அன்றைய பொழுதை கழித்தார். மேலும் 50 ஆயிரம் ரூபாயை அவருக்கு கொடுத்தார் அவருக்கு பணம் கொடுத்து அன்போடு அனுப்பி வைத்தார்.