கமல் பட ரீமேக்லாம் நான் நடிக்க மாட்டேன்! பாலச்சந்தரிடமே சொன்ன சித்தார்த்!
தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். ஆயுத எழுத்து, பாய்ஸ் போன்ற படங்கள் மூலமாக அமெச்சூர் இளைஞராக அறிமுகமான சித்தார்த், தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
அந்த வகையில் தற்போது ‘சித்தா’ படமும் சமூக கருத்துடன் கூடிய படமாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சித்தார்த், தனக்கு கமல் படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1976ல் வெளிவந்து ஹிட் அடித்த படம் ‘மன்மதலீலை’. இந்த படத்தை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப ரீமேக் செய்யலாம் என கே.பி முடிவு செய்துள்ளார். அதற்கு சரியான நடிகர் குறித்து யோசித்தபோது சித்தார்த்தை அழைத்து பேசிய பாலச்சந்தர் இந்த ரீமேக் படத்தில் நீதான் நடிக்க வேண்டும் என கேட்டாராம்.
அதற்கு சித்தார்த் “கடவுள் மாதிரி நடிப்பதே கஷ்டமான வேலை. நீங்கள் கடவுள் நடித்த படத்தில் அந்த கடவுளாகவே என்னை நடிக்க சொல்றீங்களே. கமல் சார் பட ரீமேக் எதையும் என்னால் நடிக்க முடியாது. அவரை விட இனி அதை யாரும் சிறப்பாக செய்ய முடியாது. நீங்களும் அவரும் சேர்ந்து செய்த படங்கள் என்றால் என்னால் கண்டிப்பாக முடியவே முடியாது” என்று கூறி விட்டாராம்.