தமிழ் சினிமாவில் பழைய நடிகர்களுக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வமும் மரியாதையும் இப்போது உள்ள நடிகர்களை விட அதிகமாகவே இருக்கும். படப்பிடிப்பு துவங்குகிறது என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள் நடிகர்கள்.
சிவாஜி கணேசனை எடுத்துக் கொண்டால் அவரும் கூட எல்லா படங்களிலுமே படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூட முன்னால் வந்து விடுவாராம். ஆனால் இப்போது உள்ள நடிகர்கள் அப்படி கிடையாது.
23ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது இயக்குனர் பாண்டி ராஜ் அதில் பணிபுரிந்திருந்தார். அந்த அனுபவம் குறித்து அவர் கூறும் பொழுது நாகேஷ், மனோரமா, வி.எஸ் ராகவன் போன்ற நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு மிக சீக்கிரமாகவே வந்து படப்பிடிப்பு நேரத்திற்கு முன்பே மேக்கப்பும் போட்டு தயாராகி விடுவார்கள் என்று கூறினார்.
இத்தனைக்கும் நடிகர் நாகேஷ் அப்பொழுது நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தார். இருந்தாலும் ஒரு மணி நேரம் முன்னதாகவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அதேபோல வி.எஸ் ராகவனுக்கு அப்பொழுது உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தன.
காது அவருக்கு ஒழுங்காக கேட்காமல் இருந்தது. இதனால் அவரை தொட்டால்தான் அவர் அடுத்த டயலாக்கை பேசுவார் மற்றவர் என்ன டயலாக் பேசுகிறார்கள் என்பது அவருக்கு தெரியாது. பக்கத்தில் நிற்கும் ஒரு ஆள் அவரது கையை தொட வேண்டும் இப்படி எல்லாம் இருந்தும் சிறப்பாக நடித்து கொடுத்தார்கள் அந்த நடிகர்கள்.
எனவே அந்த காலத்து நடிகர்களுக்கு இருக்கும் தொழில் ரீதியான மரியாதை என்பது இப்போது தமிழ் சினிமாவில் கிடையாது என்று பாண்டிராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.






