இல்லடா வெண்ணைகளா!.. அரசியல் விமர்சகர் குறித்து பேசிய அமீர்!..
ஜாபர் சாதிக் போதை கடத்தல் குற்றம் தொடர்பான பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட துவங்கிய காலக்கட்டம் முதலே இயக்குனர் அமீர் குறித்தும் அதில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
ஜாபர் சாதிக் தமிழில் தயாரிப்பாளராக இருந்து வந்தவர். அவரது தயாரிப்பில் ஒரு சில திரைப்படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் இயக்குனர் அமீரும் அவரது தயாரிப்பில் திரைப்படம் இயக்கி வந்தார். ஆனால் பிறகுதான் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர் என அறியப்படுகிறது.
ஆனால் இதில் அமீருக்கும் தொடர்புண்டு என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமீர் பேசிய வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறும்போது ”யூ ட்யூப்பில் இவர்கள் பேசுவதை எல்லாம் பார்க்கும்போது கொஞ்ச நாளைக்கு யூ ட்யூப் பக்கமே போகாமல் இருப்பது நல்லது என தோன்றுகிறது.

ஏனெனில் அதில் ஒருத்தர் கூட உண்மையை பேசுவதில்லை. ஏதோ கையில் கொஞ்சம் காகிதங்களோடு உட்கார்ந்துக்கொள்கின்றனர். டெல்லியில் இருந்து தனக்கு தகவல் வந்ததாக கூறுகின்றனர். டெல்லியில் இருந்து உண்மையிலேயே இவர்களுக்கு தகவல் கிடைக்கிறதா என்பதே தெரியவில்லை.
ஏதோ உளவுத்துறை மாதிரி பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேனியில் கைது செய்யப்போவதே அவர்களுக்கு தெரியவில்லை. அவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்டால் ஆமாம அவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால் அவர் மேல் சாட்டியிருக்கும் குற்றத்தோடு எனக்கு தொடர்பு இருக்கா என கேட்டால் இல்லடா வெண்ணைகளா என தைரியமாக கூறுவேன்.
என்னை சந்தேகப்படுங்கள் வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஆனால் எனக்கு தீர்ப்பெழுத உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என கூறியிருந்தார் அமீர். சமீபத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்தான் அமீர் குறித்து இப்படி பேசினார். எனவே அவரை தாக்கிதான் அமீர் பேசியுள்ளார் என பரவலாக பேச்சு உள்ளது.