சினிமாவை கண்டுப்பிடித்தது யார் என்று கேட்டால் வடிவேலு ஏ.வி மெய்யப்ப செட்டியார் என்று கூறுவதாக ஒரு காமெடியை பார்த்திருப்போம். அந்த அளவிற்கு ஆரம்பக்கட்ட தமிழ் சினிமாவில் ஏ.வி.எம் நிறுவனத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு.
ஏ.வி.எம் நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஏ.வி மெய்யப்ப செட்டியார். அப்போதைய தமிழ் சினிமாவே அவர் மீது அதிக மதிப்பு வைத்திருந்தது. கமல்ஹாசனில் துவங்கி பல பிரபலங்களை அவர் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் சினிமாவில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை ஆவிச்சி செட்டியார்தானாம். ஆவிச்சி என்பதைதான் ஏ.வி என இன்ஷியலாக வைத்துள்ளார் மெய்யப்ப செட்டியார்.
ஆவிச்சி செட்டியார் கடை ஒன்றை நடத்தி வந்தார். 1900 காலக்கட்டங்களில் கடை நடத்தி வந்த ஆவிச்சி செட்டியார் அப்போதே வியக்க வைக்கும் பல விஷயங்களை செய்திருக்கிறார். மிக தாமதமாகதான் இப்போது மக்கள் அதையெல்லாம் செய்து வருகின்றனர்.
ஆவிச்சி செட்டியாரின் பழக்கங்கள்:
உதாரணமாக அவரது ஏ.வி அண்ட் சன்ஸ் கடையில் ஒரே விலை, கடன் கேட்காதீர்கள் என போர்டு இருக்குமாம். அதே போல வேலை செய்பவர்களுக்கு அமர்வதற்கு அவர் நாற்காலி போட மாட்டாராம்.
அப்படி செய்தால் அவர்கள் சோம்பேறியாக அமர்ந்து கதை பேசி கொண்டிருப்பர் என நினைத்தார் ஆவிச்சி. மாதம் ஒருமுறை சென்னைக்கு சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கிராமத்தில் விற்பனை செய்வார் ஆவிச்சி செட்டியார்.
அந்த சமயத்தி சென்னை செல்வதற்காக மாதா மாதம் கடைக்கு 3 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் கடைக்கு வெளியே “பொருட்கள் வாங்க சென்னை சென்றிருப்பதால் 3 நாட்களுக்கு கடைக்கு விடுமுறை” என எழுதியிருப்பார் ஆவிச்சி செட்டியார்.
அதே மாதிரி 1917 களிலேயே காலண்டர்களை இலவசமாக அச்சிட்டு கொடுத்து அதன் மூலம் கடையை பிரபலப்படுத்தியுள்ளார் ஆவிச்சி செட்டியார். மிக தாமதமாகதான் இதை மற்ற கடைகள் செய்ய துவங்கின.