Cinema History
அங்கிள் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க! தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்ட சிறுவன்.. நம்ம சின்ன பாய்தான்?
உலகம் முழுவதும் உள்ள துறைகளிலேயே சினிமா துறை போல மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் துறை வேறு எதுவும் கிடையாது. அந்த அளவிற்கு மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு விஷயமாக சினிமா உள்ளது.
சினிமாவில் பலரும் பல வகையில் வாய்ப்புகளை பெற்றிருப்பர். அதில் சிலர் வாய்ப்பு பெற்ற கதைகள் கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். அப்படியான ஒரு கதை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும் உண்டு.
ஏ.ஆர் ரகுமானுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் இசையமைப்பாளராக பார்க்கப்படுபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகன் என்றாலும் வேறுப்பட்ட இசை ரசனையை கொண்டவர் யுவன் சங்கர் ராஜா. அதனால்தான் இப்போது வரை அவரது இசைக்கு தனிப்பட்ட ரசிக கூட்டம் இருக்கிறது.
தனது 13 வது வயதிலேயே திரைப்படங்களுக்கு இசையமைக்க துவங்கினார் யுவன் சங்கர் ராஜா. 1997 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் டி.சிவா தயாரிப்பில் சரத்குமார் நடித்து அரவிந்தன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இளையராஜா இசையமைக்க வேண்டும் என நினைத்தார் டி.சிவா
எனவே இளையராஜாவை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு யுவன் சங்கர் ராஜா கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அதை பார்த்த டி.சிவா என்ன தம்பி ஸ்கூல் போகாமல் கிரிக்கெட் விளையாடிட்டு இருக்க என கேட்கவும், எனக்கு ஸ்கூலுக்கு எல்லாம் போக விருப்பமில்ல, வேணும்னா பட வாய்ப்பு கொடுங்க மியூசிக் போட்டு தரேன் என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை இளையராஜாவிடம் கூறியுள்ளார் சிவா. அதற்கு பதிலளித்த இளையராஜா, அவனுக்கு மியுசிக் பத்தி பெருசா தெரியாது. ஆனால் கண்டிப்பா அதில் நல்லா வருவான். அவனை நீயே சினிமாவிற்கு அறிமுகப்படுத்திவிடு என கூறியுள்ளார். அதனை அடுத்து தனது 13 வது வயதிலேயே அரவிந்தன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
