World Cinema : லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், வெற்றிமாறன் எல்லோரும் புகழ்ந்த படம்!.. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் – படத்தின் கதை.
தமிழில் உள்ள இயக்குனர்களில் துவங்கி உலகம் முழுவதும் உள்ள இயக்குனர்கள் பலரும் புகழ்ந்த ஒரு சிறப்பான திரைப்படம்தான் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். 1997 இல் ஈரானில் வெளியாகி பல விருதுகளை குவித்த இந்த திரைப்படம் ஒரு சாதாரண கதையமைப்பை கொண்ட திரைப்படமாகும்.
படத்தின் கதைப்படி கதையின் நாயகன் அலி ஃபெட்சஸிற்கு வயது 9, அவனது தங்கை சாஹ்ராவிற்கு வயது 6. இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஈரானில் பள்ளிகளை பொறுத்தவரை அங்கு காலணியாக ஷூ அணிந்து வரவேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால் அலியின் குடும்பம் ஏழ்மையில் வாழும் குடும்பமாகும். எனவே சாஹ்ராவின் ஷூ கிழிந்துப்போக அதை தைப்பதற்கு கொண்டு போகும் அலி கொண்டு வரும் வழியில் ஒரு காய்கறி கடையில் அதை தொலைத்து விடுகிறான். இந்த விஷயத்தை சாஹ்ராவிடம் கூறும் அலி அந்த ஷூவை கண்டுப்பிடித்து தருவதாகவும் அதுவரை வீட்டில் விஷயத்தை சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறான்.
அதற்கு லஞ்சமாக தன் தங்கைக்கு பென்சில், பேனா போன்றவற்றை கொடுத்து வருகிறான். ஆனால் பள்ளிக்கு இருவருமே ஷூ போட்டுக்கொண்டுதான் போக வேண்டும். சாஹ்ராவிற்கு காலையில் பள்ளி, அலிக்கு மதியம்தான் பள்ளி. எனவே காலையில் அலியின் ஷூவை போட்டு கொண்டு செல்லும் சாஹ்ரா மதியம் ஓட்டமும் நடையுமாக வந்து தினசரி ஷூவை அலியிடம் கொடுப்பதும் அவன் அதை போட்டுக்கொண்டு பள்ளிக்கு தாமதமாக செல்வதுமாக இருக்கிறது.

இந்த நிலையில் அந்த ஷூவை அலி கண்டுப்பிடிக்க போகிறானா.. அல்லது புது ஷூவை வாங்கத் தர போகிறானா? எப்படி இந்த பிரச்சனையை சரி செய்ய போகிறான் என்பதே கதையாக இருக்கிறது. இந்த கதையின் வழியாக ஈரானில் ஏழை மக்களின் வாழ்க்கை முறையையும் அதே சமயம் பணக்கார மக்களின் மேம்பட்ட வாழ்க்கையையும் படம் காட்டுகிறது.
அலி மற்றும் சாஹ்ராவின் உயிரோட்டமான நடிப்பு படத்திற்கு மேலும் சிறப்பளிக்கும் விதமாக இருக்கிறது. அனைத்து இயக்குனர்களும் புகழ்வதற்கு நிகரான ஒரு திரைப்படம்தான் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது என்றே கூறலாம்.