நாங்களும் பொங்கலுக்கு வறோம்.. ‘வாரிசு’ கூட போட்டி போடும் தெலுங்கு ஸ்டார்கள்!

விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அதற்கு போட்டியாக பெரிய படங்கள் பல களமிறங்க தயாராகி வருகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி தயாராகியுள்ள படம் ‘வாரிசு’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

வாரிசு படத்தை 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கியுள்ள ‘துணிவு’ படத்தையும் அதே பொங்கலுக்கு களம் இறக்குகின்றனர்.

துணிவு விநியோகத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இதனால் இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்குவது குறித்து சலசலப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில்தான் இந்த போட்டி. தெலுங்கில் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தில்ராஜூ. வாரிசு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளதுடன், படத்தின் இயக்குனர் வம்சி தெலுங்கு என்பதாலும், விஜய்க்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளதாலும் இந்த படத்தை ஹிட் அடிக்கலாம் என்ற தில்ராஜூவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை விழும்போல தெரிகிறது.

தெலுங்கில் பிரபலமான ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் படங்களும் பொங்கலை டார்கெட் செய்துள்ளதாம். சிரஞ்சீவி நடித்து வரும் “வால்ட்டர் வீரய்யா” மற்றும் பாலகிருஷ்ணாவின் “வீரசிம்மா ரெட்டி” ஆகிய படங்கள் பொங்கலை டார்கெட் செய்து வருவதால் தெலுங்கிலும் தியேட்டருக்கு கடும் கிராக்கி ஏற்படும் என கூறப்படுகிறது.

இது தவிர ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழ் இரண்டிலும் பெரிய ஸ்டார்களின் படங்கள் மொத்தமாக ரிலீஸாக உள்ளது திரையரங்குகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Refresh