Tech News
இனிமே எல்லாத்துக்கும் சார்ஜ் உண்டு.. கூகுள் பே அறிவித்த புதிய கட்டணம்..!
இணையத்தின் பயன்பாடு அதிகரித்த அதே சமயத்தில் இணைய வழி பண பரிவர்த்தனைகளும் அதிகமானது. ஒரு காலத்தில் ஆன்லைன் வழி பணம் செலுத்த வேண்டும் என்றாலே இண்டர்நெட் பேங்கிங் என்கிற அம்சத்தை வங்கியில் கேட்டு பெற வேண்டும்.
அப்போதுதான் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால் இப்போது எல்லா பரிவர்த்தனைகளிலும் யு.பி.ஐ வந்துவிட்டது. யு.பி.ஐ மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சேவையை வங்கிகள் ஒருப்பக்கம் வழங்கி வந்தாலும் மக்கள் பெரும்பாலும் கூகுள் பே, போன் பே, பே டி எம் என தனியார் ஆப்களையே பயன்படுத்துகின்றனர்.
ஆரம்பத்தில் மின்சார கட்டணம், அழைப்பேசி ரீச்சார்ச், டி,டி.ஹெச் ரீச்சார்ச் என பல அம்சங்கள் கூகுள் பே போன்ற ஆப்களில் கிடைத்தன. அதனால் இப்போது மக்கள் பணத்தை கையில் வைத்து செலவு செய்வதற்கே மறந்துவிட்டனர். தொடர்ந்து யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மூலமாகதான் செலவு செய்கின்றனர்.
தற்சமயம் அதன் பயன்பாடு அதிகரித்த நிலையில் தங்களது சேவைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த தனியார் ஆப்கள் கட்டணங்கள் வசூலிக்க துவங்கியுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே கூகுள் பே போன் பே போன்ற செயலிகள் மொபைல் ரீச்சார்ச்க்கு குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூல் செய்கின்றன.
இந்நிலையில் இனி மின்சார கட்டணம், எரிவாயு கட்டணங்களை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக கட்டினால் 0.5 முதல் 1.0% வரை கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் பே அறிவித்துள்ளது. அதன்படி மின்சார கட்டணமாக 100 ரூபாய் கட்டினால் அதற்கு 1 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி 18 சதவீதம் சேர்த்து 1 ரூபாய் 18 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதுவே 1000 ரூபாய் என்றால் 11 ரூபாய் 80 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணம் எதிர்காலத்தில் உயரலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.
