Hollywood Cinema news
ஒரு டூர் போனதால உருவான கதைதான் பவர் ரேஞ்சர்ஸ் – என்னப்பா சொல்றீங்க!..
90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான டிவி நிகழ்ச்சிகள் என பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸ் இருக்கும். இதுவரை மொத்தம் 27 வெவ்வேறு பவர் ரேஞ்சர்ஸ் கதைகள் வந்துள்ளன. அவ்வளவையும் அழுக்காமல் பார்த்தவர்கள் நம் 90ஸ் கிட்ஸ்கள்.
அப்போதைய காலக்கட்டத்தில் பவர் ரேஞ்சர்ஸ் விளையாடுகிறோம் என்றால் அதில் யார் ரெட் ரேஞ்சர் என்பதுதான் பெரிய பஞ்சாயத்தாக இருக்கும். அப்படியான பவர் ரேஞ்சர் எப்படி உருவானது என்பது பலருக்கும் தெரியாத கதையாக இருக்கலாம்.
அதை இப்போது பார்க்கலாம்.
ஜப்பானில் துவங்கிய கதை:
ஜப்பானில் எப்போதுமே அனிமே முதல் குழந்தைகளுக்கான அனைத்து தொடர்களுமே வித்தியாசமானதாகதான் இருக்கும். 1970களில் ஹாலிவுட்டிற்கும் கூட ஜப்பான் அனிமே மீது அதிக நாட்டம் வந்தது. எனவே அப்போது பிரபலமாக இருந்த மார்வெல் நிறுவனம் ஜப்பானில் இருந்த டொய் (Toei) நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி டொய் நிறுவனத்தின் கார்ட்டூன்களை ஹாலிவுட்டில் ஆங்கிலத்தில் மார்வெல் போட்டுக்கொள்ளும். அதே போல மார்வெலின் கார்ட்டூனை ஜப்பான் மொழியில் டொய் நிறுவனம் வெளியிட்டுக்கொள்ளும். இதன்படி டொய் நிறுவனத்தின் சன் வல்கன் (sun Vulcan) என்கிற தொடரை ஹாலிவுட்டிற்கு அறிமுகப்படுத்தியது மார்வெல் நிறுவனம்.
மார்வெல் நிறுவனத்தின் ஸ்பைடர் மேன் தொடரை ஜப்பானில் எடுத்தது டொய் நிறுவனம். ஆனால் இரண்டுமே அவ்வளவாக வெற்றி பெறவில்லை. எனவே பிறகு ஜப்பான் தொடர் எதுவும் அமெரிக்காவிற்கு வரவில்லை. ஏனெனில் ரசனை ரீதியாக ஹாலிவுட்டும், ஜப்பானும் அனிமேஷனில் அதிக மாற்றத்தை கொண்டிருந்தன.
பவர் ரேஞ்சர்ஸை உருவாக்கிய பயணம்
இந்த நிலையில் இஸ்ரேலி அமெரிக்கா என்னும் மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான ஹைம் சபான் (Haim Saban) ஒரு வேலையாக ஜப்பானிற்கு சென்றிருந்தார். அப்போது ஜப்பானில் ச்சவுத்டென்சி ப்யோ மென் (Choudenshi Bioman) என்கிற தொடர் வெகு பிரபலமாக இருந்தது.
அது ஒரு சூப்பர் ஹீரோ தொடராகும். தலையில் ஹெல்மட் மாட்டிய ஐவர் அடங்கிய குழு, அவர்களிடம் அட்வான்ஸ்ட் ஆயுதங்கள் இருக்கும். அதை கொண்டு ஜந்துக்களை அழிப்பர். இந்த கதை மிகவும் பிடித்து போகவே ஹைம் சபான் அதே தொடரை அமெரிக்கா சென்று 1985 இல் ப்யோ மென் என்கிற பெயரில் தயாரித்தார்.
ஆனால் அப்போதைய அமெரிக்க டிவி நிறுவனங்களுக்கு அது பார்க்கவே நகைச்சுவையாக இருந்தது. என்னையா இது அட்டை பாக்ஸை வச்சிக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்காய்ங்க. இதையெல்லாம் யார் பார்ப்பார்கள் என கூறி அனைத்து டிவி நிறுவனங்களும் அந்த தொடரை ரிஜக்ட் செய்தன.
ஆனால் ஜப்பானில் உள்ள புது வகை ரசனையை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்தார் ஹைம் சபன்.
சூப்பர் சென்டாய் உருவாக்கிய ஆர்வம்:
இந்த நிலையில்தான் சூப்பர் செண்டாய் (Super Sentai ) என்கிற இன்னொரு தொடர் (கிட்டத்தட்ட அதுவும் பவர் ரேஞ்சர் மாதிரியான தொடர்தான்) ஜப்பானில் அறிமுகமானது. இந்த முறை அதை ஆங்கிலத்தில் எடுக்கும் அளவிற்கு ஹைம் சபனிடம் வசதி இல்லை.
எனவே அதையே ஆங்கிலத்திற்கு டப்பிங் செய்தார். பிறகு 1992 ஆம் ஆண்டு ஃபாக்ஸ் கிட்ஸ் என்னும் நிறுவனத்திடம் சென்று இதற்காக உதவி கேட்டார் சபன். ஃபாக்ஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் குழந்தைகள் தொடரை விளம்பரப்படுத்துவதற்கான ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலமாக சூப்பர் செண்டாய் என்னும் அந்த தொடர் பவர் ரேஞ்சர்ஸ் என்னும் பெயரில் வட அமெரிக்காவில் ஒளிப்பரப்பாக துவங்கியது.
இதுவரை வழக்கமான ஹாலிவுட் ரக கார்ட்டூன்களை பார்த்து வந்த அமெரிக்க குழந்தைகளுக்கு பவர் ரேஞ்சர்ஸ் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக அமெரிக்காவில் இந்த தொடருக்கு அதிக வரவேற்பு வர துவங்கின. இதை பார்த்த சபன் உடனே சபன் எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனத்தை துவங்கி அதன் வழியாக பவர் ரேஞ்சர் தொடர்களை டப் செய்து ஃபாக்ஸ் கிட்ஸ் வழியாக அதை வெளியிட துவங்கினார்.
பெரும்பாலும் பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் பெரிதாக வரும் மான்ஸ்டர்களை அவர்கள் இணைந்து அழிப்பதே கதையாக இருந்தது. அது மக்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே நாமே பவர் ரேஞ்சர் தொடரை எடுக்கலாம் என முடிவெடுத்தார் சபன்.
ஹாலிவுட்டில் பவர் ரேஞ்சர்
அதனை தொடர்ந்து 1993 ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட மைட்டி மார்ஃபின் பவர் ரேஞ்சர்ஸ் என்னும் முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் வெளியானது. அதில் சபன் முக்கியமான ஒரு விஷயத்தை செய்திருந்தார். பவர் ரேஞ்சரை ஹாலிவுட்டிற்கு ஏற்றாற் போல மாற்றி எடுக்காமல் ஜப்பானியர்கள் அதை எப்படி தயாரித்தார்களோ அதே போலவே இவரும் தயாரித்தார்.
பவர் ரேஞ்சரில் நடிப்பதற்கும் ஜப்பானிய நடிகர்களையே தேர்ந்தெடுத்தார். அவர்கள் பெயரும் கூட ஜப்பான் மொழியிலேயே இருந்தது. ஆனால் பவர் ரேஞ்சரின் சக்திகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார் சபன். அதுவரை மான்ஸ்டர்கள் மட்டுமே பெரிய உருவங்களாக வந்து கொண்டிருந்தன. ஆனால் பவர் ரேஞ்சர் ஹாலிவுட்டிற்கு வந்த பிறகு மெகா சோட், அட்வான்ஸ்டு ஆயுதங்கள் என பவர் ரேஞ்சர்ஸ் அப்டேட் ஆனார்கள்.
பிறகு உலகம் முழுவதும் பவர் ரேஞ்சர்ஸ்க்கு வரவேற்பு வர துவங்கியது. அதில் எஸ்.பி.டி டைனோதண்டர், மிஸ்டிக் ஃபோர்ஸ் போன்றவை மிகவும் பிரபலமான பவர் ரேஞ்சர்ஸ் ஆகும்.
மாற்றியமைக்கப்பட்ட பவர் ரேஞ்சர்ஸ்
ஒவ்வொரு பவர் ரேஞ்சர் தொடரையும் பிரபலமாக்குவதற்காக அதில் பல மாற்றங்களை செய்தனர். உதாரணத்திற்கு எஸ்.பி.டி பவர் ரேஞ்சர்ஸ் தங்களை ஸ்பேஸ் பேட்ரோல் டெல்டா என அழைத்து கொள்வார்கள். அவர்கள் இந்த விண்வெளிக்கான போலீஸ் படை என்பது போல அதன் கதை இருக்கும்.
அதுவே டைனோ தண்டரில் பார்த்தோம் என்றால் டைனோசர்களை முன்னிலைப்படுத்தி அவர்களது கதாபாத்திரம் இருக்கும். டைனோசர்கள்தான் இவர்களது வாகனமாக இருக்கும்.
இப்படி ஒவ்வொரு பவர் ரேஞ்சர்ஸின் கதையிலும் வித்தியாசமான ஒரு விஷயம் இருக்கும். இதுவரை 27 வகையான பவர் ரேஞ்சர்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக 900க்கும் அதிகமான எபிசோடுகள் 40க்கும் அதிகமான மொழிகளில் வெளியாகியுள்ளன.
நெட்ப்ளிக்ஸ் தயாரித்து வெளியான பவர் ரேஞ்சர்ஸ் டைனோ ஃப்யூரி தொடர் இறுதியாக வந்த பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும். பவர் ரேஞ்சர்ஸ் தொடருக்கு எண்டே கிடையாது என்பது போல இன்னமும் சில பவர் ரேஞ்சர்ஸ் தொடர் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
Written by
Rajkumar k ( Freelance Content Writer)
vkrajkumar1996@gmail.com
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்