இவர் ஹாலிவுட்ல இருந்திருந்தா எங்கயோ போயிருப்பார்! –  எம்.எஸ் பாஸ்கர் என்னும் கலைஞனின் கதை!

தமிழ்சினிமாவில் ரசிகர்களுக்கான காலம் துவங்கியது முதல் திறமையான பலருக்கு அந்த திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது என சொல்லலாம். ஆண்டாண்டு காலமாக சினிமாவில் இருந்தும், சிறந்த நடிகர்களாக இருந்தும் அவர்களுக்கான அங்கீகாரத்தை அந்த துறை அவர்களுக்கு அளிக்காமல் இருந்திருக்கும்.

நடிகர் நாசர், டெல்லி கணேஷ், சார்லி என நீளும் இந்த வரிசையில் பட்டாபி பாஸ்கர் எனப்படும் எம்.எஸ் பாஸ்கர் முக்கியமானவர்.

சுருக்க வரலாறு

பெயர்: எம்.எஸ் பாஸ்கர்

நிஜ பெயர்: முத்துப்பாண்டி சுந்தரம் பாஸ்கர்

பிறந்த நாள்: 19.01.1952

வயது: 66

தந்தை பெயர்: சோமு

தாய் பெயர்: சத்யபாமா

சொந்த ஊர்: திருவாரூர், தமிழ்நாடு

ஆரம்ப வாழ்க்கை

முத்துப்பாண்டி சுந்தரம் பாஸ்கர் என்ற பெயரை கொண்ட இவர், பட்டாபி பாஸ்கர் என்றும் எம்.எஸ் பாஸ்கர் என்றும் திரை துறையில் பரவலாக அழைக்கப்படுகிறார். ஆக சிறந்த நடிகனுக்கு, கலைஞனுக்கு அவனுடைய கலைக்கான வெகுமதியை அந்த துறை அளித்தே ஆக வேண்டும். அந்த வகையில் எம்.எஸ் பாஸ்கர் தனக்கான அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற்றாரா? என்பது கேள்விக்குறியான விஷயமே.

திரைப்படத்தில் நுழைவதற்கு வெகு காலங்கள் முன்பே நாடக துறையில் பல்வேறு நடிப்புகளை காட்டி கொண்டிருந்தவர் எம்.எஸ் பாஸ்கர். முதன் முதலாக இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து முதன் முதலாக இவர் நடித்த படம் 1987 ஆம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி என்கிற திரைப்படமாகும். அதன் பிறகு பல படங்களில் அவரது தனிப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்திய போதும் அவர் துணை கதாபாத்திரமாகவே மீண்டும் மீண்டும் நடித்து வந்தார்.

அடையாளப்படுத்துதல்

அதன்பிறகு தனது நடிப்பின் வழியே தன்னை அடையாளப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கினார் எம்.எஸ் பாஸ்கர். கண்ணத்தில் முத்தமிட்டால், தமிழன், கோட்டை மாரியம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவரை தனித்து காண்பித்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா.

எங்கள் அண்ணா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம்தான் எம்.எஸ் பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. ஒரு காட்சியில் வடிவேலுக்கும், பாண்டியராஜ்க்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருக்கும்போது இடையில் வரும் கதாபாத்திரமாக எம்.எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் வரும்.

அதில் ஒரு நிஜ குடிக்காரனை போலவே நடித்த எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பானது திரைப்படம் வெளியான பிறகு அதிகமாக பேசப்பட்டது. அதுவரை பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் அதிகமாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் பெரிய ஹீரோக்களின் பார்வைகளில் பட துவங்கினார் எம்.எஸ் பாஸ்கர்.

மேலும் 2000 ஆம் ஆண்டு சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் அவர் நடித்த பட்டாபி என்கிற கதாபாத்திரம் மக்களிடையே வெகுவாக பிரபலமடைந்து அன்று முதல் பட்டாபி பாஸ்கர் என்ற பெயரை பெற்றார்.

வளர்ச்சி

எங்கள் அண்ணாவிற்கு பிறகு பிரபலமான ஹீரோக்கள் படத்தில் எம்.எஸ் பாஸ்கருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவருக்கு அதில் சிறிய சிறிய துணை கதாபாத்திரங்களே கிடைத்தன. ஒரு கதாநாயகனுக்கு மாஸ் காட்டுவதில் பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனில்  படம் முழுக்க அவருக்கு அதற்கு ஏகப்பட்ட வாய்ப்பு உண்டு, ஆனால் ஒரு துணை கதாபாத்திரத்திற்கு தன்னை மக்களிடத்தில் பதிய வைப்பதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவு.

படத்தில் அந்த கதாபாத்திரம் 5 நிமிடம் வந்தால் கூட அந்த 5 நிமிடத்தை மக்கள் மறக்காத வண்ணம் நடித்தால்தான் அவர்களுக்கான அங்கீகாரத்தை மக்களிடையே பெற முடியும். அதை சர்வ சாதரணமாக செய்தார் எம்.எஸ் பாஸ்கர்.

பெரிய படங்களில் சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அதன் மூலம் மக்களிடையே தன்னை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு அந்த 5 நிமிடம் போதுமானதாக இருந்தது. 2004க்கிற்கு பிறகு வெளியான கஜேந்திரா, போஸ் (வெடிமுத்து), அட்டகாசம் (பாலியல் மருத்துவர்), திருப்பாச்சி (தரகர்), சிவகாசி (வக்கீல் வெங்கி) என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தால் கூட அதில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தனது பெயர் எம்.எஸ் பாஸ்கர் என்று மக்களிடையே அடையாளப்படுத்தினார் இந்த நடிகர்.

இவரின் நடிப்பு திறமையை கண்ட இயக்குனர் பேரரசு அவரது திரைப்படமான திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி போன்ற படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பளித்து வந்தார். அதன் பின் அஞ்சாதே, சிவாஜி, அழகிய தமிழ் மகன், சந்தோஷ் சுப்பிரமணியம், அறை எண் 305 இல் கடவுள், குசேலன், தசாவதாரம் என தமிழின் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கூட எம்.எஸ் பாஸ்கர் நடித்தார்.

இவர் நடித்த படங்களில் மொழி, பயணம் போன்ற திரைப்படங்கள் எம்.எஸ் பாஸ்கரை அடுத்த நிலைக்கு கொண்டு போன படங்கள். அதுவரை எம்.எஸ் பாஸ்கரை திரை துறை ஒரு காமெடி நடிகனாக மட்டுமே பார்த்திருந்த போது எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தன்னால் நடிக்க முடியும் என்பதை வெளிக்காட்டிய விஷயமாக இந்த திரைப்படங்கள் அமைந்தன.

டர்னிங் பாயிண்ட்

பல படங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு விகரம் பிரபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த அரிமா நம்பி திரைப்படம் எம்.எஸ் பாஸ்கரின் வாழ்க்கையில் முக்கியமான படமாகும். இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம். அதாவது அந்த கதாபாத்திரம் இல்லாமல் படத்தை கொண்டு செல்ல முடியாது. அப்படி ஒரு நேர்மையான போலீஸ் கதாபாத்திரமாக நடித்த எம்.எஸ் பாஸ்கர் அதில் வெளிப்படுத்திய நடிப்பின் மூலம் மிகவும் பேசப்பட்டார்.

பிறகு 2017 இல் கதாநாயகனுக்கு அடுத்தப்படியான, அதாவது படத்தின் இரண்டாவது ஹீரோவாக எம்.எஸ் பாஸ்கர் நடித்த படம் எட்டு தோட்டாக்கள். இதுவரை தமிழ் சினிமா காணாத, சுத்தமாக சிரிக்கவே தெரியாத ஒரு சீரியஸான கதாபாத்திரமாக அந்த படத்தில் எம்.எஸ் பாஸ்கர் களம் இறங்கினார். அந்த படம் வெளியான பிறகு ஹீரோவை விடவும் எம்.எஸ் பாஸ்கர் பற்றியே பலரும் பேசிக்கொண்டிருந்தனர். இந்த திரைப்படத்திற்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான சிமா விருதுகளை இவர் பெற்றார்.

அதன் பிறகும் கூட முக்கியமான கதாபாத்திரம் எதுவும் பெரிதாக அவருக்கு கிடைக்கவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் தற்சமயம் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பை காட்டியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

டப்பிங் ஆர்டிஸ்ட்

எம்.எஸ் பாஸ்கரை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் அவர் ஒரு டப்பிங் கலைஞரும் கூட, ஹாலிவுட்டில் பல படங்களுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேனில் ஜோனா ஜேம்ஸன் என்ற கதாபாத்திரம், ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் வரும் வக்கீல் என பல கதாபாத்திரங்களுக்கு இவர் தமிழ் டப்பிங் பேசியுள்ளார்.

ஆனால் இவரை சிறந்த டப்பிங் கலைஞர் என்பதை மெய்பித்த படம் தமிழில் வந்த காமராஜர் திரைப்படம் ஆகும். அந்த படத்தில் காமராஜர் கதாபாத்திரத்திற்கு எம்.எஸ் பாஸ்கர் தனது குரலையே மாற்றி முழுக்க முழுக்க விருதுநகர் பாஷையிலேயே பேசி இருப்பார். காமராஜரே பேசியது போல நம்மை உணர வைக்கும் உச்சரிப்பு. இது காமராஜர் படத்தில் மட்டுமின்றி எம்.எஸ் பாஸ்கரின் பல படங்களிலும் காணக்கூடிய முக்கியமான விஷயமாகும். எந்த ஒரு ஊர் பாஷையையும் அந்த ஊரில் பிறந்தவர் போலவே பேசக்கூடியவர் எம்.எஸ் பாஸ்கர்.

விருதுகள்

சிறந்த துணை கதாபாத்திரம் – சீமா

ஒரு சிறந்த நடிகர் 40 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் இருந்தும் ஒரே ஒரு விருதை மட்டும் பெற்று எந்த ஒரு பெரிய அங்கீகாரத்தை பெறாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இப்போது எம்.எஸ் பாஸ்கருக்கு 66 வயதாகிறது. சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு பெரிய அங்கீகாரமும் இவருக்கு கிடைக்கவில்லை.

டாணாக்காரன் திரைப்படத்தில் பாஸ்கர் ஒரு போலீஸ் கதாபாத்திரமாக நடித்திருப்பார். அதில் பல வருடங்களாக திறமையான போலீஸாக அந்த கதாபாத்திரம் இருக்கும். தன்னை விட மேல் அதிகாரியாக இருப்பவருக்கே அந்த கதாபாத்திரம்தான் பயிற்சி கொடுத்திருக்கும். ஆனாலும் துறை சார்ந்த அரசியல் காரணமாக அந்த போலீஸ் கான்ஸ்டபிளாகவே இருப்பார்.

இந்த கதாபாத்திரம் எம்.எஸ் பாஸ்கரின் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போகும் என்றே கூறலாம்.

Refresh