தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உண்டு என்பதை நாம் அறிந்திருப்போம். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “3”, “வை ராஜா வை” ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்த நிலையில் அவர் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
“லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வெகு காலம் கழித்து ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதாலும் இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார் என்பதாலும் இத்திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் பொதுவாகவே சிறப்புத் தோற்றங்களில் நடிப்பதை சமீப காலமாகவே தவிர்த்து வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வழக்கத்தையே நிறுத்திக்கொண்டார்.
இந்த நிலையில்தான் தனது மகள் இயக்கிய “லால் சலாம்” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தனது மகள் இயக்குகிறார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. அதாவது தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு வெற்றி இயக்குனராக கோலிவுட்டில் வலம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தந்தையாக அவர் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் பரவி வருகின்றன.
இது ஒரு புறமிருக்க, இப்போது தனது இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்காக ரஜினிகாந்த் ஒரு புதிய புராஜெக்ட்டை ஒப்புக்கொண்டுள்ளாராம். தனது சகோதரிக்காக கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்திடம் தற்போது “எனக்கும் கால்ஷீட் கொடுங்கள்” என கேட்டுள்ளாராம் சௌந்தர்யா.

அதன்படி ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகளுக்காக தனது பத்து நாட்களுக்கான கால்ஷீட்டை கொடுப்பதற்கான முடிவை எடுத்துள்ளாராம். அதாவது சௌந்தர்யா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். அதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பதாக முடிவாகி உள்ளதாம். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறதாம்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இதற்கு முன் ரஜினிகாந்தை வைத்து “கோச்சடையான்” என்ற மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துடன் கூட ஒரு முழுநீள அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை. அதனை தொடர்ந்து தற்போது மிகவும் சாதுர்யமாக பேசி ரஜினிகாந்தை தனது புதிய திரைப்படத்தில் நடிக்க வைக்க ஒப்புதல் வாங்கியுள்ளாராம் சௌந்தர்யா. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.