அந்த ஏ.ஆர் ரகுமான் பாட்டுதான் எல்லாத்துக்கும் காரணம்!.. – வரிசையாக ஹிட் கொடுத்த பாடலாசிரியர்…
தமிழ் சினிமா துறையில் நடிகர்கள் போல பாடலாசிரியர்கள் பெரிதும் பிரபலமாவதில்லை. அவர்கள் எழுதிய வரிகளை நாம் எப்போதும் பாடிக்கொண்டு இருப்போம். ஆனால் யார் அந்த பாடலை எழுதி இருப்பார் என யோசிப்பதில்லை.
வைரமுத்து, வாலி, கண்ணதாசன் போன்ற சில பிரபலமான பாடலாசிரியர்களை மட்டுமே நாம் அறிவோம். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதியவர் கவிஞர் பழனி பாரதி. ஒரு பேட்டியில் அவர் சினிமாவிற்கு வந்த சுவாரஸ்யமான கதையை பகிர்ந்துள்ளார்.
இவர் காதலுக்கு மரியாதை, ப்ரெண்ட்ஸ், சச்சின் என அதிகமாக விஜய் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். இவருக்கு முதன் முதலாக 1994 ஆம் ஆண்டு வெளிவந்த புதிய மன்னர்கள் படத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது.

அதில் அவர் எழுதிய நீ கட்டும் சேல மடிப்புலதான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. அதன் பிறகு அவர் பாடல் வரிகள் எழுதிய இரு படங்களின் பாடல்களும் நல்ல ஹிட் கொடுத்தன.
வரிசையாக வந்த வெற்றிகள்:
கட்டும் சேல பாட்டை கேட்டதும் சுந்தர் சி கவிஞர் பழனி பாரதியை அழைத்துள்ளார். அவரிடம் தனது படத்திற்கும் பாடல் எழுதி தருமாறு கேட்டுள்ளார். இப்படியாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் பாடல் வரிகளை பழனி பாரதி எழுதினார். அதில் வந்த அழகிய லைலா பாடலும் செம ஹிட் கொடுத்தது.
இதற்கிடையே அவரை அழைத்த விக்ரமன் பூவே உனக்காக படத்திற்கு பாடல் எழுதி கேட்டார். அதில் அவர் எழுதிய ஆனந்தம் ஆனந்தம் பாடும், மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது, சொல்லாமலே யார் பார்த்தது ஆகிய அனைத்து பாடல்களும் அதிக ஹிட் கொடுத்தது.
இருந்தும் தமிழ் சினிமாவில் அதிக பட வாய்ப்புகளை பெறாத ஒரு கவிஞராகவே பழனி பாரதி இருந்துள்ளார்.