Special Articles
தளபதி மாதிரி லவ் பண்ணவும் முடியாது! – விஜய்யின் 5 எவர்க்ரீன் காதல் படங்கள்!
தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டார் அங்கீகாரத்தில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தளபதி என செல்லமான ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, மலேசியா என பகுதிகளிலும் பெரும் ரசிக கூட்டமே உள்ளது.
2000களின் ஆரம்பம் முதல் காதல் படங்களாக நடித்து வந்த விஜய் “திருமலை” படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாறி பல ஹிட்களை கொடுத்து வருகிறார். இடையே சச்சின், காவலன் போன்ற காதல் படங்களை அவர் நடித்திருந்தாலும் அவரது எவர்க்ரீன் காதல் படங்கள் 1990களில் வந்த படங்களாக உள்ளன.
அப்படியாக விஜய் காதலில் கலக்கிய எவர்க்ரீன் காதல் படங்கள் சிலவற்றை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
5. பூவே உனக்காக (1996)
நடிகர்கள்: விஜய், சார்லி, சங்கீதா, நாகேஷ், நம்பியார்
இயக்கம் : விக்ரமன்
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ்
1996ல் வெளியான இந்த படம் விஜய் திரைப்பட வாழ்வில் ஒரு திருப்புமுனை படம் என்று சொல்லலாம். அப்போதைய ஹிட் இயக்குனரான விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமும் இதுதான்.
காதலியின் காதலை சேர்த்து வைப்பதற்காக போராடும் காதலனாக விஜய் நடிப்பில் நம்மை உருக வைத்திருப்பார். வெள்ளையங்கிரி, சார்லியுடன் சேர்ந்து செய்யும் காமெடியில் நம்மை விழுந்து சிரிக்க வைக்கும் அதே விஜய், க்ளைமேக்ஸில் “ஒரு செடியில் ஒரு பூ” டயலாக் மூலம் நம்மை அழவும் வைப்பார்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த காலத்தில் இந்த படத்தின் பாட்டு கேசட் கிடைக்காமல் பலர் தேடி அலைந்தார்களாம். சரியாக காதலர் தினத்திற்கு அடுத்த நாள் பிப்ரவரி 15ல் வெளியாகி காதலர்களுக்கு விருந்து படைத்தது இந்த படம்.
4. துள்ளாத மனமும் துள்ளும் (1999)
நடிகர்கள் : விஜய், சிம்ரன், மணிவண்ணன், பாரி வெங்கட் (டவுசர் பாண்டி)
இயக்கம் : எழில்
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ்
விஜய்யின் பல்வேறு காதல் ஹிட் படங்களுக்கு பிறகு வெளியானாலும் விஜய் படங்களில் முக்கியமான இடத்தை பெற்ற படம்.
இந்த படத்திற்கு முன்னாள் விஜய் – சிம்ரன் சேர்ந்து நடித்த ஒன்ஸ் மோர் செம ஹிட். அதற்கு பிறகு மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த இந்த படம் அதை விட பெரும் ஹிட் அடித்தது.
பாடகனாக இருக்கும் குட்டியை ருக்கு காதலிக்கிறாள். ஆனால் அவள் அவனை பார்க்கும்போதெல்லாம் சந்தர்ப்பவசமாக அவர் ஒரு ரௌடி என்ற பிம்பம் உருவாகி விடுகிறது. இடையே அவளுக்கு கண்பார்வை போய்விட அவளுக்கு கண்பார்வை கிடைக்க போராடுகிறான் குட்டி. தான் ரௌடி என நினைத்தவன்தான் தான் விரும்பும் குட்டி என தெரியாமலே ருக்கு இருக்கிறாள்.
கடைசியில் குட்டியை அவள் எப்படி சேர்கிறாள் என்பதுதான் கதை. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஒவ்வொரு பாடலும் ஹிட். அதுவும் அந்த இன்னிசை பாடிவரும் பாடலை பாடாதவர்கள் அந்த தலைமுறையிலேயே இல்லை என்ற அளவுக்கு ஹிட்.
3. காதலுக்கு மரியாதை (1997)
நடிகர்கள் : விஜய், ஷாலினி, சிவக்குமார், தாமு
இயக்கம் : பாசில்
இசை: இளையராஜா
தயாரிப்பு : முருகன் சினி ஆர்ட்ஸ்
விஜய் – ஷாலினி நடிப்பில் வெளியான முதல் படம் இது. மலையாளத்தில் பாசில் இயக்கி வெளியாகி ஹிட் அடித்த படமான அனியாதிப்ராவு படத்தின் தமிழ் ரீமேக்தான் காதலுக்கு மரியாதை.
முந்தைய காதல் படங்களில் நகைச்சுவை தன்மையுடன் காதலும் செய்து வந்த விஜய். இந்த படத்தில் சீரியஸான டீனேஜ் காதலனாக கலக்கி இருப்பார்.
ஜீவா என்ற இந்து பையனுக்கும், மினி என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல். அதற்கு மதரீதியாக எழும் எதிப்புகள்தான் கதை. முதலில் வீட்டை விட்டு வெளியேறும் இரண்டு பேரும் பின்னர் வீட்டார் சம்மதத்துடன் எப்படி சேர்ந்தார்கள் என்பது சுவாரஸ்யமான கதை.
வழக்கமாகவே காதல் பாடல்களை தங்கம் இழைப்பது போல இழைக்கும் இளையராஜா இந்த படத்தில் அனைத்து பாடல்களில் புதிய உச்சம் தொட்டிருப்பார். அப்போதைய டீனேஜ் இளசுகளுக்கு ட்ரெண்ட் செட்டிங் காதல் படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை
விஜய் நடிப்பில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் இது
2. நினைத்தேன் வந்தாய் (1998)
நடிகர்கள்: விஜய், தேவயானி, ரம்பா, வினு சக்கரவர்த்தி, மணிவண்ணன்
இயக்கம் : செல்வபாரதி
இசை : தேவா
தயாரிப்பு : ராகவேந்திரா மூவி கார்ப்பரேஷன்
இதுவும் ஒரு ரீமேக் படம்தான். தெலுங்கில் ராகவேந்திர ராவ் இயக்கி வெளியாகி ஹிட் அடித்த பெல்லி சண்டதி படத்தின் ரீமேக்தான் நினைத்தேன் வந்தாய்.
விஜய்க்கு முதலாவதாக ஹிட் அடித்த முக்கோண காதல் கதை என்றும் இதை சொல்லலாம். தான் கனவில் கண்ட பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறான் கோகுல கிருஷ்ணன். ஆனால் வீட்டார் கட்டாயத்தால் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார்.
பிறகுதான் தன் கனவு கன்னி ஸ்வப்னாவை சந்திக்கிறார். காயத்ரியும், ஸ்வப்னாவும் அக்கா, தங்கை என தெரிய வரும்போது யாரோடு கோகுல கிருஷ்ணன் சேர்கிறார் என்பது க்ளைமேக்ஸ்.
விஜய்யின் காதல் படங்களுக்கு பெரும் பலமே இசைதான். இந்த படத்திலும் அந்த பங்கை தேவா தேவைக்கு மிஞ்சியே பூர்த்தி செய்திருந்தார்.
1. குஷி (2000)
நடிகர்கள் : விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக்,
இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா
இசை : தேவா
தயாரிப்பு : ஸ்ரீ சூர்யா மூவிஸ்
இதற்கு முன்னாள் வந்த விஜய் காதல் படங்களில் எல்லாம் ஹீரோயினை உருகி உருகி காதலிப்பவராகவும், ஹீரோயினுக்காக பல தியாகங்களை செய்பவருமாகவே விஜய் இருந்தார். அதுவே ஒரு டெம்ப்ளேட் ஆகி போனது.
முதன்முறையாக அந்த டெம்ப்ளேட்டை உடைத்து விஜய்யிடமிருந்து வேறு ஒரு நடிப்பை வெளியே கொண்டு வந்து மிரள வைத்த படம். முதன்முறையாக காதலர்கள் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையை வைத்து ஹிட் அடித்தார் எஸ்.ஜே.சூர்யா.
விஜய் – ஜோதிகா சேர்ந்து நடித்த முதல் படமும் இதுதான். மெட்ராஸ் காலேஜில் படிக்கும் சிவாவும், ஜென்னி என்னும் செல்வியும் முதலில் நண்பர்களாகிறார்கள். பின்னர் அவர்களுக்குள் காதல் உருவாகிறது. ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்னரே சில இடுப்பு பிரச்சினையாலும், அதை தொடர்ந்து ஏற்படும் ஈகோ பிரச்சினைகளாலும் இருவருக்கும் சண்டை தொடர்கிறது.
ஒரு சமயத்திற்கு மேல் ஒருவர் மேல் ஒருவருக்கு உள்ள காதல் புரிய வரும் நிலையில் அவர்கள் ஈகோவை மறந்து எப்படி சேர்ந்தார்கள் என்பதுதான் கதை.
அதுவரை காதல் மேல் இருந்த தியாக, புனித பிம்பத்தை எல்லாம் உடைத்து இளசுகள் நடுவே காதலில் ஏற்படும் ஈகோவை வைத்து காதலை ரியாலிட்டியுடன் காட்டியதால் இளைஞர்களிடையே பெரும் வெற்றி பெற்றது இந்த படம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்