உலக அளவில் வசூலை குவித்த டாப் 10 ஹாலிவுட் திரைப்படங்கள்

உலக அளவில் எப்போதும் திரைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. உலகம் முழுவதும் அதிகமான வளர்ச்சியைக்கண்ட ஒரு துறையாக திரைத்துறை உள்ளது. சில திரைப்படங்கள் உலக அளவில் வெளியாகி வசூல் சாதனை செய்யும் அளவில் திரைத்துறை வளர்ந்துள்ளது.

அந்த வகையில் ஹாலிவுட்டில் அதிகமான படங்கள் உலக அளவில் வெளியாகி வசூல் சாதனைகள் செய்துள்ளன. அப்படியான டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

10.அவெஞ்சர்ஸ்

உலக அளவில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் 10 வது இடத்தில் இருக்கும் படம் அவெஞ்சர்ஸ். உலகம் முழுவதும் தனக்கென சூப்பர் ஹீரோ ரசிகர்களை கொண்ட மார்வல் நிறுவனம் தயாரித்த முக்கியமான திரைப்படம்.

பல சக்திகளை கொண்ட சூப்பர் ஹீரோக்கள் உலகை காக்க ஒன்றிணைவதுதான் கதை என்றாலும் கூட படத்தின் சுவாரஸ்யம் காரணமாக இது மக்களிடையே பிரபலமானது. மேலும் இதில் வரும் தோர், அயர்ன் மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு ஏற்கனவே தனி தனியாக திரைப்படம் எடுத்துவிட்டு பிறகு அவர்களை அவெஞ்சர்ஸில் ஒன்றிணைத்தது மார்வெல் நிறுவனம்.

2012 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 1,51,51,00,211 அமெரிக்க டாலர்கள் அதாவது 150 கோடி அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனை செய்தது.

09.ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7

தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களில் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படமும் அடங்கும். வின் டீசல் முக்கிய கதாபாத்திரமாக நடித்த இந்த படம் கார் ரேசை முக்கிய கருவாக கொண்டிருக்கும்.

ஆரம்பத்தில் கார் ரேஷ் திரைப்படமாக வந்துக்கொண்டிருந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போக போக காரை கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுவது போல கதையில் மாற்றம் கண்டது. பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஐந்தாம் பாகத்தில் இருந்து அது மக்களிடையே பிரபலமடைய துவங்கியது.

2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 151,68,81,526 அமெரிக்க டாலர்கள் வசூலித்தது.

08.த லயன் கிங்

90ஸ் கிட்ஸ்கள் காலத்தில் கார்ட்டூனாக எடுத்த திரைப்படங்களை தற்சமயம் லைவ் ஆக்‌ஷன் திரைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வருகிறது வால்ட் டிஸ்னி நிறுவனம், சிண்ட்ரெல்லா, அலாவுதின் என அந்த வரிசையில் வந்த மற்றொரு திரைப்படம் த லயன் கிங்.

ஆப்பிரிக்க காட்டில் ராஜாவாக இருக்கும் சிங்கம் முஃபாசா, அதன் பிள்ளை சிம்பா. முஃபாசாவிற்கு பிறகு அதன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் முஃபாசாவின் சகோதரர் என மக்களிடையே நிலவும் அதிகார ஆசையை விலங்குகளோடு ஒப்பிட்டு காட்டப்பட்ட திரைப்படம் இது. குழந்தைகளுக்கான படம் என்பதாலும், விலங்குகள் அனைத்தும் லைவ் ஆக்‌ஷனாக வருவதாலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் உலக அளவில் 1,654,367,452  அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

07.ஜூராசிக் வேல்ட்

90ஸ் ஹாலிவுட் விரும்பிகள் எவரை கேட்டாலும் அவர்களுக்கு ஜுராசிக் பார்க் என்ற திரைப்படத்தை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஹாலிவுட் இயக்குனரான ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் முக்கியமான படைப்பான இந்த திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

மனிதர்கள் வாழ்வதற்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்த டைனோசர்களை மனிதர்கள் மறு உருவாக்கம் செய்ய பிறகு அதுவே அவர்களுக்கு எப்படி பிரச்சனையாக மாறுகிறது என்பதே கதை. அதன் தொடர்ச்சியாக பிறகு வெளிவந்த திரைப்படம்தான் ஜூராசிக் வேல்ட். செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராகும் டைனோசர்கள், அதை தடுக்க நினைக்கும் ஹீரோ என இதன் கதை செல்கிறது.

இதுவரை 2 பாகங்கள் வந்த நிலையில் தற்சமயம் ஜூராசிக் வேல்ட் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வர இருக்கிறது.  இதன் முதல் பாகம் 1,669,979,967 அமெரிக்க டாலர்கள் வசூலித்து 7 ஆவது உள்ளது.

06.ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் திரைப்படம் முதன் முதலில் 2002 இல் வந்த காலக்கட்டம் முதலே அதற்கு தனியாக ஒரு ரசிக பட்டாளம் உருவாகிவிட்டது, டாபிக்கு பிறகு ஆண்ட்ரே கார்பீல்டு, டாம் ஹோலண்ட் என ஸ்பைடர் மேன்கள் மாறியபோது ஒவ்வொரு ஸ்பைடர் மேனுக்கும் தனி தனியான ரசிக வட்டாரங்கள் உருவாகின.

இந்த நிலையில் இந்த 3 ஸ்பைடர் மேன்களுக்குமான திரைப்படமாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. சில காரணங்களால் மல்டி ரியாலிட்டி ஓபன் ஆக, அதனால் பல ரியாலிட்டியில் இருந்த வில்லன்களும் ஸ்பைடர்மேன்களும் தற்போது டாம் ஹோலண்ட் இருக்கும் ரியாலிட்டிக்கு வருகின்றனர். பிறகு இந்த பிரச்சனையை டாம் ஹோலண்ட் எப்படி தடுக்கிறார் என்பதே கதை.

உலக அளவில் இந்த படம் 1,888,495,754 அமெரிக்க டாலர்களை வசூலித்து, வசூல் சாதனையில் 6 ஆவது இடத்தில் உள்ளது.

05.அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாகும். அந்த ஒரு படத்திற்காக அதற்கு முன்பு 10 வருடங்களாக 20க்கும் அதிகமான திரைப்படங்களை மார்வெல் எடுத்தது. அந்த படங்கள் அனைத்தையும் பார்த்தால்தான் நம்மால் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

அவெஞ்சர்ஸ் என்னும் பூமியின் சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோ குழு. அவர்களை விட சக்திசாலியான தனோஸ் என்னும் வில்லன். உலக மக்கள் தொகையில் பாதியை அழிப்பது மூலம் உலகில் பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என நம்பும் தனோஸ், இன்பினிட்டி கற்களை கொண்டு அதை சாதிக்க நினைக்கிறான். ஆனால் அவற்றில் இரண்டு இன்பினிட்டி கற்கள் அவெஞ்சர்ஸிடம் இருக்க, தனோஸ்க்கும் அவெஞ்சர்ஸ்க்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த திரைப்படம் 2,048,3569,754 அமெரிக்க டாலர்களுக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இதன் வசூலை முறியடித்தது.

04.ஸ்டார் வார்ஸ் எபிசோட் VII – த ஃபோர்ஸ் அவாக்னெஸ்

1977 இல் வெளியாக துவங்கி இப்போது வரை ஹாலிவுட்டில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் திரைப்படம்தான் ஸ்டார் வார்ஸ் சீரிஸ். விண்வெளியில் நன்மைக்காக போராடும் ஜடாய் என்னும் வீரர்களை முக்கிய கருவாக கொண்டு கதை நகர்கிறது.

விண்வெளியில் நீதியை நிலைநாட்ட ஜடாய்களுக்கு ஃபோர்ஸ் எனப்படும் ஆற்றல் இருக்கும். பல தலைமுறைகள் கழித்து ஜடாய்கள் மற்றும் ஆற்றல் இரண்டுமே இல்லாமல் போனதால் தீயவர்கள் அதிகமாகி இருப்பார்கள். இந்த நிலையில் மீண்டும் ஜடாய் சக்தி ரே என்னும் பெண்ணுக்கு வர அவள் எதிரிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளே ஸ்டார் வார்ஸ் தி ஃபோர்ஸ் அவாக்னெஸ்.

இதன் மொத்த வசூல் 2,064,615,817 அமெரிக்க டாலர்கள் ஆகும்

03.டைட்டானிக்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் சிறந்த படைப்புகளில் ஒன்று டைட்டானிக். 1912 ஆம் ஆண்டு அதுவரை யாரும் கண்டிராத அளவில் மிகப்பெரிய பயணிகள் கப்பல் செய்யப்பட்டது. அதன் பெயர்தான் டைட்டானிக். ஆனால் கடலில் முதல் முறையாக செலுத்தப்பட்ட போதே அந்த கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த பயணிகள் இறந்தனர்.

இந்த உண்மை நிகழ்வை கருவாக கொண்டு அந்த கப்பல் விபத்திற்கு நடுவே ஒரு காதலை உருவாக்கி தனது படத்தை வெளியிட்டார் ஜேம்ஸ் கேமரூன். இதற்காக ஏரியில் ஒரு கப்பலை நிஜமாக மூழ்கடித்து படத்தை எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 1997 இல் வெளியான இந்த படத்தின் மொத்த வசூல் 2,207,986,545 டாலர்கள் ஆகும்.

02.அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் தொடர்ச்சியான எண்ட் கேம் அதிகமான வசூலை பிடிக்க முக்கிய காரணம் அதன் திரைக்கதையே ஆகும்.

இதுவரை எந்த படத்திலும் இல்லாத வகையில் சூப்பர் ஹீரோக்கள் பலரும் கோடிக்கணக்கான மனிதர்களும் தனோஸ் என்னும் வில்லனால் அழிந்துவிட, அழிந்தவர்களை மீட்பதற்காக உயிரோடு இருப்பவர்கள் செய்யும் முயற்சியே எண்ட் கேம்.

2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இந்த திரைப்படம் 2,797,800,564 டாலர்கள் வசூலித்து உலக அளவில் வசூல் சாதனை செய்த படங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

01.அவதார்

2009 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் காமரூனின் கை வண்ணத்தில் வெளியான அவதார் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற படமாகும். கிட்டத்தட்ட வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இன்னும் அவதாரின் வசூல் சாதனையை வேறு எந்த திரைப்படங்களாலும் முறியடிக்க முடியவில்லை.

2019ஆம் ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இதன் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்தது. ஆனால் கொரோனா காலத்தில் திரைப்படங்கள் இல்லாததால் அவதார் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதும் அதிக மக்களால் பார்க்கப்பட்டதால் அவதார் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

இதன் மொத்த வசூல் 2,845,899,541 அமெரிக்க டாலர்கள் ஆகும். அடுத்து டிசம்பரில் வர இருக்கும் அவதார் 2 திரைப்படம் இதன் வசூலை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh